இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் தேர்தல் தள்ளிவைப்பு; பின்னணியில் முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தேர்தல் தள்ளி போடப்பட்டதன் பின்னணியில், தற்போதைய மாநில செயலர் முத்தரசன் இருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், 26வது மாநில மாநாடு, சேலத்தில் நடந்தது. நான்கு நாள் மாநாட்டில், முக்கிய அம்சமாக, அடுத்த மாநில செயலர் யார் என்பது குறித்து, தனி அறையில் ஆலோசிக்கப்பட்டது. தேசிய பொதுச்செயலர் ராஜா, அவரது மனைவி ஆனி, தேசிய செயலர் நாராயணா உள்ளிட்ட, 31 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதில், புதிய செயலரை தேர்வு செய்ய முடியாத அளவுக்கு விவாதமும், வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. மாநில செயலர் பதவிக்கு, 75 வயது கடந்த முத்தரசனால் மீண்டும் போட்டியிட முடியாது. 131 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளனர். அதில், நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரித்தால், முத்தரசனை மாநில செயலராக மீண்டும் தேர்வு செய்ய முடியும். ஆனால், நிர்வாக குழு உறுப்பினராக முத்தரசன் இருக்க வேண்டும்; அதில் அவர் இல்லை என்பதால், அவரால் மீண்டும் மாநில செயலர் பதவிக்கு போட்டியிட முடியாது. அதனால், தன் ஆதரவாளர் சந்தானத்தை மாநில செயலராக தேர்வு செய்ய, முத்தரசன் விரும்பினார். ஆனால், வீரபாண்டியன், பெரியசாமி, மூர்த்தி போன்றோர் போட்டியாக வந்ததால், ஒருமனதாக சந்தானத்தை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால், மாநில செயலர் தேர்தல், மூன்று மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இன்னும் மூன்று மாதங்களில், பஞ்சாபில் நடக்கவுள்ள அகில இந்திய மாநாட்டில், மாநில செயலர் தேர்தலை நடத்தலாம் என, கட்சியினரிடம் கூறப்பட்டுள்ளது. ஆனால், நிர்வாக ரீதியான செயல்பாடுகளில், கம்யூ., இயக்கங்களும் மற்ற கட்சிகளைப் போல சென்று கொண்டிருப்பதாக கட்சியினர் பலரும், இந்த நிகழ்வுகளைப் பார்த்துவிட்டு வருத்தப்படுகின்றனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -