உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் தனி பிரிவுக்கு புகார் அளித்தும் பயனில்லை

முதல்வர் தனி பிரிவுக்கு புகார் அளித்தும் பயனில்லை

சென்னை: திருவண்ணாமலை, ஈரோடு, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், ஜாதி சான்றிதழ் கிடைக்காமல், 5,000க்கும் மேற்பட்ட பழங்குடியினர் தவிப்பதாக கூறப்படுகிறது.தமிழகத்தில், இருளர், நரிக்குறவர், மலையாளி உள்ளிட்ட, 37 வகை பழங்குடியின சமூகத்தினர் உள்ளனர்.

போராடுகின்றனர்

இவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு பெறும் வகையில், ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளதுடன், நலத்திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், இவை இச்சமூக மக்களுக்கு முழுதும் சென்றடைவதில்லை. பொதுவாக, பள்ளி, கல்லுாரிகளில், 'அட்மிஷன்' மற்றும் கல்வி உதவித்தொகை, வீட்டுமனை பட்டா போன்ற நலத்திட்டங்களை பெற, பழங்குடியினருக்கு ஜாதிச்சான்று அவசியம். ஆனால், தமிழகத்தில் வசிக்கும் பழங்குடியினர், ஜாதி சான்றிதழ் பெற போராடி வருகின்றனர். தர்மபுரி, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், பழங்குடியினர் ஜாதிச்சான்று கேட்டு வரும் விண்ணப்பங்களை, வருவாய் கோட்டாட்சியரான ஆர்.டி.ஓ.,க்கள், பல்வேறு காரணங்களை கூறி, நிலுவையில் வைத்து விடுவதாக கூறப்படுகிறது.இதனால், பழங்குடியினரில் பலர், எஸ்.சி., சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம், பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து, பழங்குடியினர் நல சங்கத்தினர் கூறியதாவது:திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும், எங்கள் சமூகத்தினர், 5,000க்கும் மேற்பட்டோரின் ஜாதி சான்றிதழ் விண்ணப்பங்களை, வருவாய் துறையினர் காரணமின்றி நிலுவையில் வைத்துள்ளனர்.

30 முறை மனு

இதுகுறித்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு, 2023 முதல் புகார் அளித்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில், 30க்கும் மேற்பட்ட முறை பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். அவர்கள் தற்போது வரை, எந்த முன்னெடுப்பும் எடுக்காமல் இருப்பது, வேதனையாக உள்ளது. ஆர்.டி.ஓ.,க்களின் அலட்சியத்திற்கு, துறை அதிகாரிகளே முதன்மை காரணம். எனவே, இப்பிரச்னையில் முதல்வர் உடனடியாக தலையிட்டு, அனைவருக்கும் விரைந்து சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
மே 26, 2025 07:08

அரசு பணிகளில் குற்றவாளிகள் ஊடுருவி உள்ளதால் எங்கு மனுக்கள் அளித்தாலும் பயனில்லை.லஞ்சம் கொடுத்தால் அந்த குற்றவாளிகள் எத்தகைய குற்றங்களையும் செய்து தீர்க்க தகுதியில்லாத கோரிக்கைகளையம் நிறைவேற்றி வைப்பர்.