உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊரக வளர்ச்சி துறை வேலைக்கு விண்ணப்பிக்க வசதியே செய்து தராத அரசால் குழப்பம்

ஊரக வளர்ச்சி துறை வேலைக்கு விண்ணப்பிக்க வசதியே செய்து தராத அரசால் குழப்பம்

சென்னை: மாவட்ட கலெக்டர்களின் அறிவிப்பை தொடர்ந்து, ஊரக வளர்ச்சி துறை காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, இணைய தளத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையை தவிர்த்து, 37 மாவட்டங்களில், 388 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், 12,482 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்களில், வட்டார வளர்ச்சி அலுவலர் முதல் அலுவலக உதவியாளர் வரை பல்வேறு பணியிடங்கள் உள்ளன. இது மட்டுமின்றி, இரவு காவலர், மின் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களும் உள்ளன. நான்கரை ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், வாகன ஓட்டுனர், பதிவக எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதனால், காலி பணியிடங்கள் எண்ணிக்கை நுாற்றுக்கணக்கில் அதிகரித்து உள்ளன. இதனால், பலரும் பணிச்சுமைக்கு ஆளாகி வருகின்றனர். அடுத்தாண்டு சட்டசபை தேர்தலும், அதைத்தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே, காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை, ஊரக வளர்ச்சி துறை துவக்கியுள்ளது. இதுதொடர்பாக, பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள் வாயிலாக, காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதன் நகல்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக அறிக்கை பலகையில் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், காலி பணியிடங்கள் தொடர்பான விபரங்கள், ஊரக வளர்ச்சி துறையின், www.tnrd.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ளன. செப்டம்பர் 1 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கு, வரும் 30ம் தேதி கடைசி நாள் எனவும், அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஊரக வளர்ச்சி துறையின் இணையதளத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில், விண்ணப்பம் செய்வதற்கு வசதியாக, எந்த தகவலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும், இணையதளம் முழுதும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது. இதனால், ஆர்வமுடன் விண்ணப்பிக்க முயன்றவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை