உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிராவல், சவுடு மண் குவாரிகள் முடக்கம் அமைச்சர் மீது கட்டுமான துறை புகார்

கிராவல், சவுடு மண் குவாரிகள் முடக்கம் அமைச்சர் மீது கட்டுமான துறை புகார்

சென்னை : தமிழகத்தில் கிராவல் மற்றும் சவுடு மண் எடுப்பது, வினியோகிப் பது உள்ளிட்ட பணிகள் முடங்கியுள்ளதாக, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துஉள்ளனர். தமிழகத்தில் நீர்நிலை களில் இருந்து கிராவல், சவுடு மண் எடுக்க, குறிப்பிட்ட சில நிபந்தனைகள் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், மாவட்டத்துக்கு நான்கு இடங்கள் என்ற அடிப்படையில், கிராவல், சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். இதில், குறைந்தபட்ச அளவில் வண்டல் மண் எடுக்க, விவசாயிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்து, இதற்கான அனுமதி பெறலாம். ஆனால், கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் கிராவல் மண் எடுப்பதில், ஒவ்வொரு குவாரிக்கும் தனியார் ஒப்பந்ததாரர்கள் சிலர் பெயரில் அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் தான் லாரிகளுக்கு பணம் பெற்று, கிராவல் மண் வழங்குவர். இதற்கான நடைசீட்டும் இவர்கள் வாயிலாகவே வழங்கப்படுகிறது.

அழுத்தம்

இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:தமிழகத்தில் சாலைகள் அமைப்பது, கட்டடங்களில் காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பணிகளுக்கு, கிராவல் மண் அவசியம். இந்த மண்ணை வாங்குவதிலும் தற்போது பிரச்னை ஏற்பட்டு உள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த எஸ்.ராமச்சந்திரன், ரத்னம் ஆகியோர் கட்டுப்பாட்டில் தான், கிராவல் மண் எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவர்கள் தங்களுக்கு அடுத்த நிலையில், நான்கு ஒப்பந்ததாரர்களை நியமித்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராவல் மண் விற்பனையை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை ராமச்சந்திரனை இப்பொறுப்பில் இருந்து மாற்ற, ஆளுங்கட்சி தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பழைய ஒப்பந்ததாரர்களை மாற்ற மறுப்பதால், இந்த விவகாரம் சிக்கலாகி உள்ளது. பழைய ஒப்பந்ததாரர்கள் தானாக வெளியேறுவது என்றாலும், அவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள விண்ணப்பங்கள் காரணமாக, புதியவர்கள் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.புதிய நபர்களை இதில் அனுமதிக்கலாம் என்றால், தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பழைய ஒப்பந்ததாரர்கள் பெயரில், தலா, 20 விண்ணப்ப கோப்புகள் நிலுவையில் உள்ளன.

நடவடிக்கை

இதை கடந்து புதியவருக்கு அனுமதி அளிப்பது என்றால், அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில், உரிய முடிவு எடுக்க வேண்டிய அமைச்சர் துரைமுருகன் மவுனம் காத்து வருவதால், கிராவல், சவுடு மண் எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சாலை மற்றும் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆற்று மணல் விற்பனை போன்று கிராவல், சவுடு மண் விற்பனையை, ஆன்லைன் முறைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை