நெகமம்:நெகமம் அருகே, காட்டம்பட்டியில் அரசு நிலத்தில் இருந்த மரங்களை வெட்டி அகற்றியதாக சர்ச்சை எழுந்துள்ளது.நெகமம் அருகே காட்டம்பட்டி ஊராட்சி உள்ளது. இங்கு, பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் கிணத்துக்கடவு இணைப்புச்சாலை அருகே, இரண்டு ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.அதில், கருவேலம், வெள்ளவேள மரம், கொடவேல மரம் உள்ளிட்ட பலவகை மரங்கள் பல ஆண்டுகளாக வளர்ந்திருந்தன.இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் வாயிலாக துாய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.அங்கு இருந்து, மரங்கள் வெட்டி வாகனங்களில் கொண்டு செல்வதாகவும், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் உறுதுணையாக இருப்பதாகவும் புகார் எழுந்தது.மரங்கள் கடத்துவாக எழுந்த சர்ச்சை குறித்து எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட கலெக்டருக்கு புகார் தெரிவித்தார்.மரங்களை வெட்டுவதற்கு வருவாய் துறையில் அனுமதி பெறப்பட்டதா என்றும், தனி நபர் சுயநலனுக்காக மரங்களை எடுத்து செல்வதாகவும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, வெட்டப்பட்ட மரங்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் குவிக்கப்பட்டது, ஒரு சில மரங்கள் புறம்போக்கு நிலத்திலேயே விடப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார் கூறியதாவது:காட்டம்பட்டியில் உள்ள இரண்டு ஏக்கர் அரசு நிலம், எதிர்கால திட்டத்தை கருத்தில் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அங்கு வேலி அமைப்பதற்காக ஊராட்சி வாயிலாக துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.துாய்மை பணியின் போது, பொக்லைன் இயந்திரம் வாயிலாக சுத்தம் செய்ததால், ஐந்து காய்ந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. எவ்வித மரங்களும் வெளியே கொண்டு செல்லவில்லை. அவை, கிராம நிர்வாக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மதிப்பு குறைவான மரங்களாக இருந்தாலும், ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.எம்.எல்.ஏ., ஜெயராமன் கூறுகையில், ''அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்ட வேண்டுமானால், மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், அனுமதியின்றி ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் மரங்கள் வெட்டி, பல டன் மரத்துண்டுகளை லாரியில் கொண்டு சென்றதாக புகார் எழுந்தது.மரம் வெட்டுவதற்கு முறையாக அனுமதி பெறப்பட்டதா, யார் வெட்டினார்கள், வெட்டி மரத்தை எங்கு கொண்டு சென்றார்கள் என, மாவட்ட கலெக்டரிடம் கேட்டேன். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்,'' என்றார்.