ஒரே இடத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணிபுரிவோர் மாற்றம் கூட்டுறவு துறை நடவடிக்கை
சென்னை:மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், ஒரே கிளை, ஒரே பணியிடத்தில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை, வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு, வங்கிகளின் மேலாண் இயக்குநர்களுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 933 கிளைகளுடன் செயல்படுகின்றன. இவற்றில், பல்வேறு பிரிவில் கடன் வழங்கப்படுகின்றன. மொத்தம், 2,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதில், பலர் தொடர்ந்து ஒரே கிளையில், ஒரே பிரிவில், பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.எனவே, நிதி, நிர்வாக அம்சங்களில் முறைகேடுகளை தவிர்க்க, ஒரே கிளை, ஒரே பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய, மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மேலாண் இயக்குநர்களுக்கு, கூட்டுறவு பதிவாளர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள் யாரும் ஒரு குறிப்பிட்ட கிளை, பதவி, பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றவில்லை என்பதை, மேலாண் இயக்குநர் உறுதிசெய்ய வேண்டும். 'பணியாளர்கள் விபரங்கள், எந்த தேதியில் இருந்து பணிபுரிகின்றனர் என்பதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.