உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பழனிசாமிக்கு கோர்ட் உத்தரவு

விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பழனிசாமிக்கு கோர்ட் உத்தரவு

சென்னை:வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக கூறப்படும் புகாரில் வழக்குப்பதிவு செய்யும்படி, சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி பெற்றார். அவர் தாக்கல் செய்த வேட்புமனு மற்றும் பிரமாண பத்திரத்தில், சொத்து விபரங்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் நீதிமன்றத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய, 2023 ஏப்., 26ல் சேலம் குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பழனிசாமி மனுத் தாக்கல் செய்தார். மனுவில், 'வேட்புமனுவில் தவறான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. மிலானி, எடப்பாடி தொகுதியைச் சேர்ந்தவர் அல்ல; தேர்தலில் போட்டியிடவும் இல்லை. இந்த புகார், விசாரணைக்கு ஏற்புடையதல்ல' என கூறப்பட்டது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.வேல்முருகன் நேற்று, பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்தார்; காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி பழனிசாமிக்கு உத்தரவிட்டார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை