ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி விதிமீறல் கட்டடங்களை அகற்ற கோர்ட் உத்தரவு
மதுரை:திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டடங்களுக்கு எதிரான வழக்கில், 'சட்ட நடைமுறைகளை பின்பற்றி அகற்ற வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.கரூர், குளித்தலை மகுடீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனு:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலை சுற்றிலும், 1 கி.மீ., பரப்பளவில், 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடங்கள் அமைக்கக்கூடாது. இது அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதை மீறி, பல்வேறு கட்டடங்கள் சட்டவிரோதமாக எழுப்பப்பட்டுள்ளன. இவை கோவில் கோபுரத்தை மறைக்கும் வகையில் உள்ளன.விதிமீறல் கட்டடங்களை அகற்ற கோரி, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர், அறநிலையத்துறை கமிஷனர், திருச்சி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மனோன்மணி ஆஜரானார்.அரசு பிளீடர் திலக்குமார், கோவில் தரப்பு வழக்கறிஞர் வினோத் ஆஜராகி தெரிவித்ததாவது: மாநகராட்சி உதவியுடன் அனுமதியற்ற கட்டுமானங்கள் அடையாளம் காணப்படும். சட்டம், விதிகள்படி கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விளக்க மளிக்க வாய்ப்பளிக்க வேண்டும். சட்ட நடைமுறைகளை பின்பற்றி, அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற வேண்டும். இதை, 12 வாரங்களில் முடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.