உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு : பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு : பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

புதுடில்லி: ''டில்லி ஐகோர்ட்டிற்கு வெளியே, கடந்த, 7ம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில், பலியானவர்களின் குடும்பத்திற்கு, 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,'' என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, வழக்கறிஞர் கவுரவ் குமார் பன்சால் என்பவர், அதே கோர்ட்டில் பொதுநலன் கோரும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'குண்டு வெடிப்பால் இறந்தவர்களின் உறவினர்களுக்கும், குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்யும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய ஐகோர்ட் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: டில்லி ஐகோர்ட்டிற்கு வெளியே, கடந்த, 7ம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பில், பலியானவர்களின் குடும்பத்திற்கு, தலா, 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதேபோல், குண்டு வெடிப்பால் நிரந்தரமாக ஊனம் அடைந்தவர்களுக்கும், 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சரிபாதியாக இந்தத் தொகையை பகிர்ந்து கொண்டு, மூன்று வார காலத்திற்குள் வழங்க வேண்டும். இதுமட்டுமின்றி, மோசமான அளவில் காயமடைந்தவர்களுக்கு, தலா, 3 லட்ச ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும். குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குழந்தைகளுக்கு தேவையான கல்வி அளிப்பதையும், மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியானவர்களுக்கு டில்லி மாநில அரசு, வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும்.நீதி கோவிலின் வாசலில் இச்சம்பவம் நிகழ்ந்ததால், இதை மாறுபட்ட ஒன்றாக கருத வேண்டும். மேலும், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிறப்பான சிகிச்சை கிடைப்பதையும் டில்லி மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜர் : டில்லி ஐகோர்ட் வளாக குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேர், டில்லிக்கு அழைத்து வரப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்பதாக, இ-மெயில் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக, காஷ்மீரில், ஷாரிக் அகமது, அபித் ஹுசைன், அமீர் அப்பாஸ் தேவ் என்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், மூன்று பேரையும் நேற்று டில்லிக்கு அழைத்து வந்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். ஷாரிக் அகமது, அபித் ஹுசைன் ஆகியோர், 10 நாள் போலீஸ் காவலிலும், அமீர் அப்பாஸ் தேவ், ஒரு வார காலம் போலீஸ் காவலிலும் வைத்து விசாரிக்கப்பட உள்ளனர். இவர்களிடம், அறிவியல் பூர்வமான விசாரணைகள் நடத்த, தேசிய புலனாய்வு நிறுவனம் கோர்ட்டின் அனுமதியை கோரியுள்ளது. பார்லிமென்ட் தாக்குதலில் ஈடுபட்ட, அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி, முஜாகிதீன்கள் இந்த குண்டு வெடிப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது. எனினும் குண்டு வைத்தவர்கள் குறித்த விவரம் தெரியாததால், இது குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தேசிய புலனாய்வு நிறுவனம், 10 லட்ச ரூபாய் வெகுமதி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை