உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரைம் கார்னர்

கிரைம் கார்னர்

*ஆத்திச்சூடி படித்த 'ராபரி' வாலிபர் துாத்துக்குடி: துாத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் கடந்த 31ம் தேதி இரவு ஒருவரிடம், இரண்டு வாலிபர்கள் மொபைல் போனை பறித்து தப்பினர். போலீசார் விசாரித்தபோது, சிலோன் காலனியை சேர்ந்த மகாராஜன், 25, மற்றும் அவரது நண்பர் சரண், 24, ஆகியோர் மொபைல் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. மகாராஜனை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவ்வையார் எழுதிய, ஆத்திச்சூடி பாடலை பத்து முறை படிக்க செய்து, நுாதனமாக தண்டனை வழங்கினர். *'பிடிவாரன்ட்' நபருக்கு 'கம்பி'தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பெரியக்கடை தெருவில், இரிடியம் விற்பதாக மோசடியில் ஈடுபட்ட 12 பேரை, 2014ல் கிழக்கு போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் கோர்ட்டில் நடந்த வழக்கில், 2018ல் மயிலாடுதுறை மாவட்டம், மாதிரிமங்கலத்தை சேர்ந்த செந்தில், 32, என்பவர், ஆஜராகாமல் இருந்து வந்தார். இவர் மீது, 2024ல், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் மலேஷியாவில் இருந்து, விமானம் மூலம் சென்னை வந்த செந்திலை, போலீசார், கைது செய்தனர். *போதை மாத்திரை விற்றவர் கைது பள்ளிகொண்டா: வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த சந்தைமேடு பகுதியில், ஜூலையில் பள்ளிகொண்டா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதை மாத்திரை பயன்படுத்திய ஐந்து பேரை கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், போதை மாத்திரைகளை ஆன்லைனில் சப்ளை செய்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் பன்சால், 40, என்பவரை, அந்த மாநிலத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14,500 போதை மாத்திரைகள், மொபைல் போனை பறிமுதல் செய்தனர். *பெண்ணை கொன்றவருக்கு 'காப்பு' கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த நாசாகால்கொட்டாயை சேர்ந்தவர் நஞ்சம்மாள், 41. திம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், மீன் கடை நடத்தி வந்தார். சுண்டேகுப்பத்தை சேர்ந்தவர் மாரியப்பன், 35, நேற்று முன்தினம் இரவு, நஞ்சம்மாள் கடைக்கு வந்து மீன் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று அதிகாலை, மீன் கடை வாசலில் துாங்கிய நஞ்சம்மாள் தலையில், அருகிலிருந்த கல்லை போட்டு மாரியப்பன் கொன்றார். காவேரிப்பட்டணம் போலீசார், மாரியப்பனை கைது செய்தனர். *ரூ.50 லட்சம் சுருட்டிய மேலாளர் கைது ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி, செம்மண்கூடலை சேர்ந்த வெங்கடேசன், 50. இவர், ஓமலுார் அரசு மருத்துவமனை சாலையில், ஜெயம் மற்றும் ஐஸ்வர்யம் என்ற நிதி நிறுவனம் நடத்தினார். அலுவலகத்தில், 2021 ல் வரவு - செலவு கணக்கை சரிபார்த்தபோது, 50.42 லட்சம் ரூபாயை, மேலாளர் இளவரசன் கையாடல் செய்திருப்பது சமீபத்தில் தெரிந்தது. வெங்கடேசன் புகா ரின்படி, ஓமலுார் போலீசார், நேற்று முன்தினம், இளவரசனை கைது செய்தனர். *பேத்தியை கொன்ற பாட்டி திருவனந்தபுரம்: எர்ணாகுளம் அருகே செல்லானம் அரட்டுப்புழா கடவு பகுதியைச் சேர்ந்தவர் ஆன்டனி, 35, மனைவி ரூத், 30. தம்பதிக்கு 3 வயதில் மகன், டேல்னா மரியா சாரா என்ற ஆறு மாத பெண் குழந்தையும் இருந்தது. நேற்று முன்தினம், டேல்னா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில், ரூத்தின் தாய் ரோஸ்லி, 60, குழந்தையின் கழுத்தை அறுத்துக்கொன்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 'ரோஸ்லி மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால், விசாரணை நடத்த முடியவில்லை' என தெரிவித்தனர். *கஞ்சா செடி வளர்த்தவர் கைது ஆலங்காயம்: திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பீமன் வட்டம் ஜார்பென்டாவை சேர்ந்தவர் கணபதி, 45. இவர், இரண்டு நாட்களுக்கு முன், காவலுார் காப்புக்காட்டில், வன விலங்குகளை வேட்டையாட, நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தார். துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், நேற்று அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்ப்பது தெரிந்தது. கணபதியை கைது செய்து, விசாரிக்கின்றனர். *பா.ஜ., நிர்வாகி கொலை: நால்வருக்கு ஆயுள் சிறை ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார், புழுதிக்குளம் ரமேஷ், 30. இவர் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றிய பா.ஜ., இளைஞர் அணி தலைவராக பொறுப்பு வகித்தார். இவர், 2015 நவ., 23ல், தென் பொதுவக்குடி அருகே ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில், ஒரு மாதத்திற்கு முன், ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் பாலகிருஷ்ணன், 59, என்பவரின், டிரைவர் தேவராஜ், காரில் சென்ற போது, ரமேஷ் காரில் உரசியது. இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த விரோதத்தில் தேவராஜ், அவரது தந்தை வேலுசாமி, நண்பர்கள் ஆகியோர், பாலகிருஷ்ணன் நிதியுதவியுடன் ரமேஷை வெட்டி கொன்றது தெரிந்தது.இவ்வழக்கில் தேவராஜ், பரம்பை பாலா, வேலுசாமி, பாலகிருஷ்ணன், தவமணி, உட்பட, 12 பேரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், பாலா, 52, வேலுசாமி, 65, திருமுருகன், 32, கருணாகரன், 32, ஆகியோருக்கு ஆயுள்; மற்றொரு பிரிவில், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தவமணி, 64, என்பவருக்கு ஏழு ஆண்டுகள், மகேந்திரன், 53, சுரேஷ்குமார், 50, ஆகியோருக்கு தலா, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி