மணல் கடத்தலில் பிடிபட்டால் இனி கிரிமினல் வழக்கு
சென்னை:கனிமங்கள் கடத்தலில் பிடிபட்ட, 3,741 வாகனங்கள் தொடர்பாக, கிரிமினல் வழக்கு பதிவு செய்ய, கனிம வளத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கருங்கல் ஜல்லி எடுக்க, தனியார் நிலங்களில் குவாரிகள் உள்ளன. இதில் உரிமம் பெறும் ஒப்பந்ததாரர்கள், அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதாக புகார் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாது, ஆற்று மணல், சவுடு மணல், கிராவல் மண் ஆகிறவற்றை, அளவுக்கு அதிகமாக எடுத்து செல்வது, முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து செல்வது தொடர்கிறது. குறிப்பாக, ஆற்று மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் பாயும் என, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கருங்கல் ஜல்லி, மணல் போன்ற கனிமங்கள் கடத்தலில் ஈடுபடுவோர் பிடிபடுகின்றனர். மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய மண்டலங்களில், நடப்பு ஆண்டில், பிப்., இறுதி வரை, 3,741 லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பிடிபட்டன. பல இடங்களில் கூடுதல் பாரம் என, சாதாரண வழக்குகளே பதிவாகி உள்ளன. இதில் நடந்த கனிமவள கடத்தல் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிய முடிவு செய்யப்பட்டுள்ளது. கனிமவள கடத்தலை தடுக்க, இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.