கிரஷர் உரிமையாளர்கள் இன்று முதல் ஸ்டிரைக்
தமிழக கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில், 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் தமிழகம் முழுதும் கால வரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுதும் உரிய அங்கீகாரம் பெற்று, 3,000 கல் குவாரிகள், 3,000க்கும் மேற்பட்ட கிரஷர் யூனிட்கள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில், 40,000 வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. குவாரிகளில் இருந்து தினமும் சராசரியாக, 50 யூனிட் அடிப்படையில், 2 லட்சம் யூனிட் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதன் உத்தேச மதிப்பு, யூனிட்டுக்கு 5,000 ரூபாய் என்ற அளவில், 100 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தத்தால் இது பாதிக்கப்படும்.நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். மேலும், கட்டுமான பணிகளுக்கான கருங்கல், கிரஷர் ஜல்லி, எம் - சாண்ட் ஆகியவை கிடைக்காமல் கட்டுமான பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.