உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கு தடுப்பணை: முதல்வர் பதில்

நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கு தடுப்பணை: முதல்வர் பதில்

''தடுப்பணை, நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கும், குடிநீர் திட்டங்களுக்கும் ஆண்டு முழுவதும் நீர் கிடைக்கச் செய்வதற்கு பயன்படும்,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார். சட்டசபையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்த கருத்துக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்: ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீரை செறிவூட்டவும், நீர் இருப்பைக் கூட்டவும், தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. கம்பரசன் பேட்டை கிராமம், முத்தரசநல்லூர் அருகே, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் திருச்சி மாநகர குடிநீர் திட்டத்திற்கு நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால், காவிரி ஆற்றுப்படுகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது.

இப்பகுதிகளில், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பிரச்னை ஏற்படுகிறது. இவற்றைத் தடுத்து, கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு, ஆண்டு முழுவதும் நீர் கிடைக்கவும், காவிரிப்படுகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, கிணறுகளில் நீர் மட்டம் உயரவும், நீரின் தன்மை மேம்படவும் வழி செய்யும் வகையில், ஸ்ரீரங்கம் கம்பரசன் பேட்டை கிராமம், முத்தரசநல்லூர் அருகே, 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைக் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை, 1.5 மீட்டர் உயரம் தான் இருக்கும். இதனால், கரைப்பகுதிகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படாது.

கதவணை என்பது, பாசனத்திற்காக தண்ணீரை மாற்றி விடுவதற்கான அமைப்பு ஆகும். இதற்கு, 200 கோடி ரூபாய் செலவு ஏற்படும். ஆனால், தற்போது தடுப்பணை கட்டப்படும் இடத்தில் இருந்து, நீர்ப்பாசனத்தை பெருக்குவதற்கு வழி வகை எதுவும் இல்லை.

தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள தடுப்பணை, நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கும், குடிநீர் திட்டங்களுக்கும் ஆண்டு முழுவதும் நீர் கிடைக்கச் செய்வதற்கு மட்டும் தான் பயன்படும். எனவே, கதவணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை