இந்தியாவில் டார்க் பேட்டரிகள் ஜவுளி உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு
திருப்பூர்,:இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில், முழுக்க தானியங்கி முறையில் இயங்கும் 'டார்க் பேக்டரி'கள் உருவாக வேண்டும் என்பது, ஜவுளி உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.உலக அளவில் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பற்றாக்குறை என்பது பரவலாக இருந்து வருகிறது. குறிப்பாக, தொழில் நகரங்களை உள்ளடக்கிய பகுதியில், தொழிலாளரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, வங்கதேசம் போன்ற நாடுகள், முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் 'டார்க் பேட்டரி' தொழில்நுட்பத்தை பின்பற்ற துவங்கிவிட்டன.தொழிற்சாலையில் உற்பத்தி பணிகளை முழுமையாக, 'ஆட்டோமேஷன்' எனப்படும் தானியங்கி முறைக்கு மாற்றுவதே 'டார்க் பேட்டரி' எனப்படுகிறது. ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஐ.ஓ.டி., எனும் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் இணைந்து, முழுமையாக தானியங்கி முறையில் இயக்கப்படுகின்றன. பல்வேறு துறையில் நடைமுறையில் உள்ள இந்த தொழில்நுட்பம், ஜவுளித்துறைக்கு மிகவும் அவசியமாகிவிட்டது.நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், உற்பத்தி துல்லியமாக இருக்கும். 'ஏஐ' தொழில்நுட்பத்தால், உற்பத்திக்கான எரிசக்தி பயன்பாடும் வெகுவாக குறையும் என, தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துஉள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற நகரங்களில், நுால் மற்றும் துணி உற்பத்தி அதிகம் நடக்கிறது. மனித சக்தி அதிகம் உள்ள தொழிற்சாலைகள், எதிர்காலத்தில் தானியங்கி தொழில்நுட்பத்துக்கு மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.இது குறித்து, மத்திய அரசின், 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தின் வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், ''எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, டார்க் பேக்டரிகளை உருவாக்க திட்டமிட வேண்டும். ''அமெரிக்காவின், 'சாப்ட்வேர் ஆட்டோமேஷன்' நிறுவனம் உருவாக்கிய ரோபோக்கள், மனிதர்களுக்கு போட்டியாக, குறைந்த செலவில் அதிக அளவு துணிகளை வடிவமைக்கின்றன. ''அமெரிக்கா, ஜெர்மனி மட்டுமல்ல; வங்கதேசத்திலும் தானியங்கி மெஷின்கள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில், தமிழக ஜவுளி நிறுவனங்களும், டார்க் பேக்டரியாக மாற முயற்சித்து வருகின்றன,'' என்றார்.
டார்க் பேக்டரி
முழுதும் தானியங்கி முறையில் தொழிற்சாலைகள் இயங்கும்போது, அங்கு வெளிச்சம் தேவைப்படுவதில்லை. மனிதர்களுக்கு தான் வேலை செய்வதற்கு விளக்கொளி தேவைப்படும்; ரோபோக்களுக்கு அது தேவைப்படுவதில்லை. மேலும், 24 மணி நேரமும் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ளலாம். இதனால் மின்சாரம் உள்ளிட்ட செலவுகளும் வெகுவாக குறைந்துவிடும். விளக்கு ஒளி தேவைப்படாததால், இத்தகைய தொழிற்சாலைகளை 'டார்க் பேக்டரி' என்று குறிப்பிடுகின்றனர்.