குலசை ஆட்டோ விபத்தில் பலி எண்ணிக்கை மூன்றானது
குலசேகரன்பட்டினம்:துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம்முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில், கீழசெக்காரக்குடி கிராமத்தைச் சேர்ந்த, 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களில், 15 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில், நேற்று முன்தினம் இரவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.கல்லாமொழி, அனல்மின் நிலையம் அருகே ஆட்டோவும், எதிரே வந்த மினி லாரியும் மோதின. இந்த விபத்தில் ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர். துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில், செக்காரக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணப்பெருமாள், 25, முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த பெரும்படையான், 24, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர்.சிகிச்சை பெற்று வந்த வடிவேலு, 17, என்பவர் நேற்று அதிகாலை இறந்தார். எட்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.