சிசு வளர்ச்சி அறியும் ஸ்கேனர் அரசு மருத்துவமனைகளில் நிறுவ முடிவு
சென்னை:அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில், கருவில் உள்ள 'சிசுவின்' வளர்ச்சி மற்றும் குறைபாடுகளை கண்டறியும் 'அனாமலி ஸ்கேன்' கருவிகள், விரைவில் நிறுவப்பட உள்ளன. தமிழகத்தில், குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகள் தவிர, மற்ற மருத்துவமனைகளில், 'அனாமலி ஸ்கேன்' வசதி இல்லை. இதனால், பெரும் பாலும், தனியார் 'ஸ்கேன்' மையங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 'அனாமலி ஸ்கேன்' மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மருத்துவ பணிகள் கழக அதிகாரிகள் கூறியதாவது: 'அனாமலி ஸ்கேன்' கருவிகள் ஒவ்வொன்றும், தலா ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையவை. அனைத்து மருத்துவக் கல்லுாரி களிலும், அதனை நிறுவ, 50 கோடி ரூபாய் வரை செலவு ஏற்படும். அதற்கான கதிரியக்க நிபுணர்கள், ஊழியர்களை, பணியமர்த்த வேண்டியது அவசியம். எனவே, நிர்வாக காரணங்களுக்காக, தனியார் பங்களிப்புடன், அத்திட்டத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்தது. இதன் வாயிலாக, கு றைந்த கட்டணத்தில் 'அனாமலி ஸ்கேன்' செய்து கொள்ள முடியும். பணியாளர்கள், மருத்துவ கருவி பராமரிப்பு பணிகள் ஆகியவற்றை, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களே கையாளும். ஒவ்வொரு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை களிலும், அத்தகைய 'ஸ்கேன்' மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். குறைகளை அறிய முடியும் கருவுற்ற பெண்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில், 'ஸ்கேன்' மற்றும் ரத்த பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவது இயல்பு. வழக்கமான 'ஸ்கேன்' பரிசோதனையில், கருவின் வளர்ச்சி, இதயத் துடிப்பு, நீரின் அளவு ஆகியவை உறுதி செய்யப்படும். அதேநேரம், கருத்தரித்த 18 முதல் 20வது வாரத்துக்குள், 'அனாமலி ஸ்கேன்' எனப்படும், உயர் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். அதில், சிசுவின் முக்கிய உடல் உறுப்புகளில், ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பது கண்டறியப்படும். - டாக்டர் வனிதா மகப்பேறியல் துறை தலைவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை