நகரங்களுக்கு மாஸ்டர் பிளான் தயாரிக்க நிலையான வழிமுறைகள் வெளியிட முடிவு
சென்னை : தமிழகத்தில் அனைத்து நகரங்களுக்கும், 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் போது குழப்பங்கள்ஏற்படுவதை தடுக்க, நிலையான வழிகாட்டுதல்கள் வெளியிட அரசு ஒப்புதல் அளித்துஉள்ளது.தமிழகத்தில் சென்னைக்கு வெளியே உள்ள பகுதிகள், நகர் மற்றும் ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., கட்டுப்பாட்டில் வருகின்றன. இதற்கு உட்பட்ட நகரங்களில் பலவற்றுக்கு, மாஸ்டர் பிளான் என்ற முழுமை திட்டங்கள் இல்லை. இதனால், புதிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் போது, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாது, உள்கட்டமைப்பு திட்டங்கள், துணை நகரங்கள்போன்றவற்றை உருவாக்குவதிலும் பிரச்னை ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மாஸ்டர் பிளான் உள்ள பகுதிகளின் பரப்பளவை, 7 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க, அரசு முடிவு செய்துள்ளது.அதுமட்டுமின்றி, 'அம்ரூத்' உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் அடிப்படையிலும், முழுமை திட்ட தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. இந்த வகையில், 136 நகரங்களை உள்ளடக்கிய 129 முழுமை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில், கோவை, மதுரை, ஓசூர் நகரங்களுக்கான முழுமை திட்டங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன.இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கான முழுமை திட்டங்கள், வெவ்வேறு கல்வி நிறுவனங்கள் வாயிலாக தயாரிக்கப்படுகின்றன. அவர்கள் வெவ்வேறு வழிமுறைகளில் முழுமை திட்டங்கள் தயாரிக்கும் போது, அவற்றை இறுதி கட்டத்துக்கு கொண்டு செல்வதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, முழுமை திட்டங்கள் தயாரிக்கும் பணிகளை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு நிலையான வழிமுறைகளை தயாரிக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, அடிப்படை தகவல் திரட்டுதல், நில வகைப்பாடு விபரங்களை வரையறுத்தல் போன்ற பணிகள், அனைத்து நகரங்களிலும் ஒரே மாதிரி மேற்கொள்ளப்படும். இதனால், முழுமை திட்ட தயாரிப்பு பணிகள் விரைவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.