விஜய்க்கு எதிராக அவதுாறு பதிவு: போலீஸ் விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை; த.வெ.க., தலைவர் விஜய்க்கு எதிராக அவதுாறு பரப்பும் யுடியூப் சேனல் மீது நடவடிக்கை கோரிய வழக்கில், புகாரை துாத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை பொன் காந்திமதிநாதன் தாக்கல் செய்த மனு:நான் த.வெ.க., உறுப்பினர். இதன் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சில ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர். அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை போலியாக உருவமாற்றம் செய்து ரங்கசாமிக்கு பதிலாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையுடன் இருப்பதுபோல் தவறாக சித்தரித்து படத்தை ஒரு யுடியூப் சேனல் வெளியிட்டது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இந்த சேனலில் ஒளிபரப்பானது. பொய் செய்திகளை பரப்பும் அந்த சேனல் மற்றும் அதன் உரிமையாளர், உடந்தையான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி., துாத்துக்குடி எஸ்.பி., புதுக்கோட்டை போலீசாருக்கு புகார் அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எம்.நிர்மல்குமார்: துாத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை போலீசார் 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.