உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடிட்டர்களின் தேவை 2.7 லட்சமாக உயரும்

ஆடிட்டர்களின் தேவை 2.7 லட்சமாக உயரும்

கோவை: 'அடுத்த சில ஆண்டுகளில் ஆடிட்டர்களின் தேவை 2.70 லட்சமாக உயரும் வாய்ப்பு உள்ளது,'' என, இந்திய பட்டய கணக்காளர் சங்க தலைவர் ராமசாமி தெரிவித்தார். இந்திய பட்டயக் கணக்காளர் (ஆடிட்டர்கள்) சங்கத்தின் தென் மண்டல மாநாடு, 'ஞான சங்கமம்' கோவையில் நடந்தது. மாநாடு துவக்க விழாவில், தென்மண்டல பட்டய கணக்காளர் சங்கத்தின் தலைவர் சண்முக சுந்தரம் வரவேற்றார். இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் தென் மண்டல கவுன்சிலின், கோவை கிளை தலைவர் கந்தசாமி பேசியதாவது:தென்னிந்திய மண்டல கவுன்சில் துவக்கப்பட்டு 60 ஆண்டுகளாகி விட்டன. இந்த மாநாட்டில், வைர விழாவாகவும், கோவை மண்டல கிளை துவங்கி 50 ஆண்டுகளை குறிக்கும் வகையில் பொன் விழாவாகவும், கொண்டாடப்படுவது கோவைக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இவ்வாறு, கோவை கிளை தலைவர் கந்தசாமி பேசினார். இந்திய பட்டய கணக்காளர் சங்கத்தின் துணைத் தலைவர் நரேந்திர ஷா பேசியதாவது: சங்கத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு கிளையிலும் சொந்தமாக கட்டடங்களை உருவாக்க வேண்டும். கல்வியை மட்டும் அளிப்பது நின்று விடக்கூடாது. தொடர் முயற்சியாக பல்வேறு முன்னேற்றங்களையும் புகுத்த வேண்டும். ஆடிட்டர் தேர்வில் 20 சதவீதம் பேர் மட்டுமே ஒரே முறையில் தேர்வு பெறுகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெறாததற்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். கல்வியை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டப்படிப்பு முடிந்த பிறகு, ஆடிட்டர் பயிற்சிக்கு தேர்வு செய்தால், எளிதாக வெற்றி பெற முடியும். இவ்வாறு, பட்டயக்கணக்காளர் சங்கத் துணைத்தலைவர் நரேந்திர ஷா பேசினார்.இந்திய பட்டயக்கணக்காளர் சங்கத்தின் தலைவர் ராமசாமி பேசியதாவது: சத்தியம் கம்ப்யூட்டர் பிரச்னை ஏற்பட்டபோது, அந்நிறுவனத்தின் ஆடிட்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி, இந்த சங்கத்தின் மீது எழுந்தது. வெளிநாடுகளில் உள்ள அமைப்புகளைப்போல், இந்த சங்கம் பெரிய அளவில் அபராதம் விதிக்கும் அமைப்பாகவோ, தண்டனை கொடுக்கும் அமைப்பாகவோ இல்லை. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவது, நீதிமன்றங்களின் வரைமுறையை மீறியதாக இருக்கும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இத்தகைய நடவடிக்கைக்கு வழி இல்லை. பட்டயக்கணக்காளர் சங்கம், ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்தும் சங்கமாக உள்ளது. ஆடிட்டர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டும் வருகிறது. அதோடு, ஆடிட்டர்களுக்கு தேவையான புதிய கல்வி முறையையும் வகுத்து வருகிறது. உலக அளவில் உள்ள தணிக்கை சங்கங்கள், அமைப்புகளுக்கு இது போன்ற அதிகாரங்கள் குறைவே. சர்வதேச தரத்திலான தணிக்கை முறையைவிட இந்திய தணிக்கை முறை நன்றாக உள்ளது. இந்திய பொருளாதார மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ரிசர்வ் பாங்க், செபி, போன்ற அமைப்புகளுடன் அவ்வப்போது இச்சங்கமும் பங்கேற்று, மாறுதல்களை தெரிவித்து வருகிறது. நிறுவனங்கள் தொடர்ந்து ஒரே ஆடிட்டரை மட்டுமே திரும்ப திரும்ப கணக்கு தணிக்கைக்கு பயன்படுத்தக் கூடாது. இது சுழற்சி முறைக்கு மாற்றம் பெற வேண்டும். சுழற்சி முறையில் தணிக்கை செய்யப்படும் நிறுவனங்கள், முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு இல்லை. தணிக்கை பணியில், தகவல் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. பாங்க்குகள் ஒவ்வொரு கிளையாக தணிக்கை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. தற்போது,'கோர் பாங்க்கிங்' முறையால், கணக்குகள் எளிமையாக்கப்பட்டு, அவ்வப்போது சரிபார்க்கவும் முடியும். தனித்தனி பாங்க்குகள் மட்டுமின்றி, பல பாங்க்குகள் ஒருங்கிணைந்திருப்பதால், தணிக்கை முறையும், பரிமாற்ற முறையும் எளிதாகிறது. சர்வதேச அளவில், எந்த வங்கியிலும் சோதனை செய்து கொள்ளவும் தகவல் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. பட்டயக்கணக்காளர் சங்கத்துக்கு நாடு முழுவதும் 120 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. இந்த பரிசோதனைக் கூடங்களை சிஏ படிக்கும் மாணவர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை உறுப்பினர்களும் பயன்படுத்த முன்வர வேண்டும். இந்தியா முழுவதும் கொண்டுவரப்படும் பொருட்கள், சேவை மீதான வரி விதிப்பு முறை,'ஜிஎஸ்டி' அனைத்து மாநிலங்களிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வரியாக உள்ளது. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் முறையாக இது அமையும் என்பதில் ஐயமில்லை. அதேசமயம், தணிக்கை துறையை பொருத்தவரை, இது கூடுதல் பணியாக அமையலாம். இந்திய அளவில், ஆடிட்டராக விரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் ஆடிட்டர்களின் தேவை, 2.70 லட்சமாக உயரும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தற்போதுள்ள ஆடிட்டர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆடிட்டர் பணிக்கு படிப்பதை பலரும் தவிர்க்க காரணமாக, இதன் கடினமான கல்வி முறை அமைந்துள்ளது. அதேசமயம், பட்டப்படிப்பு முடிப்போர் பலர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. எளிதாக ஏதாவது ஒரு வேலை கிடைத்து விடுவதால், இப்படிப்புக்கான முயிற்சியை பலரும் கைவிட்டு விடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 75 ஆயிரம் ஆடிட்டர்களின் 90 சதவீதம் பேர் நிறுவனங்களின் பணிக்கு செல்லவே விரும்புகின்றனர். நிறுவனங்களில் இவர்ளுக்கு பல லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு 55 லட்ச ரூபாய் சம்பளம் பெறும் ஆடிட்டர்களும் உள்ளனர். தொழிலாக இதை செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வெளிநாடுகளிலும் இந்திய ஆடிட்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் இந்திய தணிக்கை முறை இரண்டாவது மிகப்பெரியதாக வளர்ச்சி பெற்றுள்ளது. விரைவில் இது முதலிடத்தை பெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இளம் தலைமுறையினரை இந்த துறையை தேர்வு செய்ய ஊக்குவிக்க வேண்டும். இந்திய பட்டயக்கணக்காளர் சங்கம், தொடர்ந்து அதன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் முயிற்சியில் மேற்கொண்டு வருகிறது. அதோடு, கூடுதல் கல்விமுறைகளையும், சான்றிதழ் வகுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு, இந்திய பட்டயக்கணக்காளர் சங்கத்தின் தலைவர் ராமசாமி பேசினார். தென் மண்டல சங்கத்தின் செயலாளர் முரளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ