ஆர்.டி.ஐ., மனுதாரர்களுக்கு இணையதளம் வாயிலாக பதில் பள்ளிக்கல்வி துறை அறிமுகம்
சென்னை: 'பள்ளிக்கல்வி துறை தொடர்பான விபரங்களை, ஆர்.டி.இ., எனும் தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கும் மனுதாரர்களுக்கு, இணையதளத்தின் வாயிலாகவே இனி பதில் அளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், இடைநிலை மற்றும் அரசு, உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தகவல் வழங்கும் அலுவலர்கள். மற்றும் மேல்முறையீட்டு அலுவலராக பொறுப்பில் உள்ள அனைவரும், ஆர்.டி.ஐ., மனுதாரர்களுக்கு, இணையதளத்தின் வாயிலாகவே பதில் அளிக்கும் வகையில், அவர்களுக்கென தனித்தனி பயனர் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பயனர் முகவரியை, பாதுகாப்பாக பராமரிக்கும் வகையில், பொறுப்பாளர்கள் தங்களுக்கான ரகசிய குறியீட்டை உருவாக்கி, தினமும், 'https:// rtionline.tn.gov.in/RTIMIS/NODAL/index.php' என்ற இணையதள இணைப்பின் வாயிலாக, ஆர்.டி.ஐ., மனுக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பின், உரிய விபரங்களை பெற்று, இணையதளத்தின் வாயிலாகவே பதில் வழங்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை, ஒவ்வொரு மாதமும், 5ம் தேதிக்குள், உயர் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அவற்றை, முதன்மை கல்வி அலுவலர்கள் தொகுத்து, 10ம் தேதிக்குள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.