| ADDED : நவ 06, 2024 01:02 AM
கோவை சென்ற முதல்வர், அங்கு பகுதி, ஒன்றியம் வாரியாக, தி.மு.க., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் பேசியதாக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்கு, நாம் என்ன செய்கிறோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். உங்களுக்கு கீழாக உள்ள கட்சியினருக்கு, நீங்கள் தான் பலமாகவும், பாலமாகவும் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு கொள்கைவிதைப்பது மிக முக்கியம். அவர்கள் தான் எதிர்காலத்திற்கான விதைகள். ஒவ்வொரு பகுதியிலும், கொள்கை வீரர்களாக, 10 அல்லது 15 இளைஞர்களை உருவாக்க வேண்டியது, உங்கள் ஒவ்வொருவரின் கடமை. நிர்வாகிகள் அவரவர் குடும்பத்திற்காக நேரத்தை செலவிட வேண்டும். தொழில் செய்வோராக இருந்தால், அதில் கவனம் செலுத்துங்கள். அதே சமயம் ஒரு நாளில், இரண்டு மணி நேரத்தை, கட்சிக்காக ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாக கட்சிப் பணிக்கு ஒதுக்குங்கள். நம் கட்சிக்கு உள்ள கட்டமைப்பால், நாம் நினைத்தால் எந்த செய்தியையும், நினைத்த நேரத்தில், 6.50 கோடி வாக்காளர்களிடமும் சேர்க்க முடியும். எனவே, நம் சாதனைகளை, அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசியதாக கூறினர். - நமது நிருபர் -