செயின் பறிப்புகள் எண்ணிக்கை அறிக்கை கேட்கிறார் டி.ஜி.பி.,
சென்னை:மாநிலம் முழுதும் நடந்த செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க, ரோந்து பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது தொடர்பாக, 15 வகையான தகவல்கள், அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அதில், செயின் பறிப்பு, வழிப்பறி நடந்த இடம், அப்பகுதி எந்த காவல் நிலைய எல்லையில் உள்ளது; குற்றம் நடந்தது பகலிலா, இரவிலா; குற்றவாளிகள் விபரம், அவர்கள் மீது ஏற்கனவே உள்ள வழக்குகள்; அவர்களின் கூட்டாளிகள் விபரம் போன்றவை, சுருக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, குற்றத்திற்கு பயன்படுத்திய வாகனம், பறிக்கப்பட்ட நகைகள் மதிப்பு, மீட்கப்பட்டவை விபரம், எந்த கடையில் இருந்து மீட்கப்பட்டது உள்ளிட்ட விபரங்களுடன், அந்த அறிக்கையை, எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு, சம்பந்தப்பட்ட போலீசார் அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.