மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய நிவாரண நிதியை மீனவர் ரமேஷ் மேடையிலேயே அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, அவர் 12,653 பயனாளிகளுக்கு ரூ.655.44 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, மீனவர் ரமேஷ் மேடையிலேயே முதல்வர் ஸ்டாலின் இடம் புகார் அளித்துவிட்டு, தனக்கு வழங்கப்பட்ட காசோலையை அருகில் நின்ற அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பிக் கொடுத்து விட்டு சென்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியது. பின்னர் மீனவர் ரமேஷ் இடம் போலீசார் விசாரணை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zfqug7e2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்ணாமலை கண்டனம்
இந்த வீடியோவை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த 2022ம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், இழப்பீடாக வெறும் 2 லட்சத்திற்கான காசோலை மட்டுமே வழங்கியதால் மீனவப் பெருமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் ரமேஷ் தனக்கு வழங்கப்பட்ட காசோலையை திருப்பிக் கொடுத்துவிட்டார். இதையடுத்து அவரை அங்கே இருந்த தி.மு.க.,வினர் தாக்கியதாக கூறப்படுகிறது. மத்தியில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, தமிழக மீனவர்கள், இலங்கை அரசால் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் இருந்த திமுக, தற்போது, இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழக மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது திமுக. மீனவரை தாக்கிய தி.மு.க.,வினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவ சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மீனவர் திடீர் பல்டி
இது குறித்து மீனவர் ரமேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் பரம்பரை திமுக காரன். முதல்வர் ஸ்டாலின் வழங்கிய நிவாரண ஆணையில் பெயர் மாறி இருந்த காரணத்தினாலேயே அதனை திருப்பி கொடுத்தேன். வேற எந்த காரணமும் இல்லை. நிவாரணத் தொகை வழங்கிய முதல்வருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.