உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஆட்சிக்கு வர விடாமல் 2021ல் அ.ம.மு.க., தடுத்தது தினகரன் பெருமிதம்

அ.தி.மு.க., ஆட்சிக்கு வர விடாமல் 2021ல் அ.ம.மு.க., தடுத்தது தினகரன் பெருமிதம்

சென்னை: ''கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல், அ.ம.மு.க., தடுத்தது,'' என தினகரன் தெரிவித்தார். சென்னையை அடுத்த திருப்போரூர் சட்டசபை தொகுதியில், அ.ம.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. தண்டலம் பகுதியில் நடந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலர் தினகரன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது: என்றைக்குமே துரோகம் வெற்றிபெற்று விடக்கூடாது. தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவிலேயே, துரோகம் செய்து, யாரும் அரசியலில் உயர்ந்துவிட முடியாது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தோம். வரும் தேர்தலில், துரோகத்தை முழுதுமாக வீழ்த்துவதே, அ.ம.மு.க., நிலைப்பாடு. அதை நோக்கிய பயணத்தை வேகமாக எடுத்துச் செல்வேன். சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம், தி.மு.க.,வுக்காக செலவழித்து, தமிழகம் முழுதும், அக்கட்சியை வலுப்படுத்தியவர், எம்.ஜி.ஆர்., கடந்த 1967ல் அண்ணாதுரை வென்று ஆட்சியமைக்க உறுதுணையாக எம்.ஜி.ஆர்., இருந்தார். அண்ணாதுரை மறைந்த பின், 1971ல் கருணாநிதி முதல்வராவதற்கும் உறுதுணையாக இருந்தவர் எம்.ஜி.ஆர்., ஆனால், தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆரை கருணாநிதி நீக்கி விட்டார். அதனால் தான், அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., ஆரம்பிக்க வேண்டியதானது. துணிந்து தனி கட்சி ஆரம்பித்து, அவர் தொடர் வெற்றிகள் பெற்றார். கட்சியை துவங்கியபோதே, பொதுச்செயலரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியை எம்.ஜி.ஆர்., ஏற்படுத்தினார். அவருக்கு பின், ஜெயலலிதாவும் அதே விதியை பின்பற்றி கட்சி நடத்தினார். ஜெயலலிதா மறைந்த பின், சுயநலத்தால், என்னை கட்சியில் இருந்து நீக்கிய பழனிசாமி, அதை தட்டிக்கேட்டு என்னை ஆதரித்த, 18 எம்.எல்.ஏ.,க்களையும் நீக்கினார். இதனால், கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை; 2021 சட்டசபை தேர்தலிலும் பழனிசாமி மீண்டும் முதல்வராக விடாமல் தடுத்தோம். வரும் சட்டசபை தேர்தலில், உறுதியான கூட்டணியை அ.ம.மு.க., அமைக்கும். துரோகத்தை வீழ்த்தி, ஜெயலலிதாவின் கொள்கைகளை, அடுத்த நுாற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும், திருப்போரூர் தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ., கோதண்டபாணி போட்டியிடுவார். தினகரன் அக்கட்சியோடு கூட்டணி சேரப்போகிறார்; இக்கட்சியோடு கூட்டணி சேரப் போகிறார் என்று ஆளாளுக்கு ஆரூடம் சொல்வர். ஆனால், யாரோடு கூட்டணி என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. பொறுமையாக இருங்கள்; அ.ம.மு.க., நல்ல கூட்டணியில் இடம்பெறும்; அக்கூட்டணியே வரும் தேர்தலில் வெற்றி பெறும்; ஆட்சிக்கும் வரும். இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை