முதல்வர் ஸ்டாலினை திடீரென பாராட்டி தள்ளுகிறார் தினகரன் செந்தில் பாலாஜிக்கும் சர்டிபிகேட்
தஞ்சாவூர்: 'கரூர் விவகாரத்தை, முதல்வர் ஸ்டாலின் பொறுப்புடன் கையாளுகிறார்', என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார். தஞ்சாவூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: தன் கையில் ஆட்சி, அதிகாரம் இருந்தாலும்; தி.மு.க., கூட்டணி கட்சிகள், விஜயை கைது செய்யுமாறு கூறிய போதும்; கரூர் விவகாரத்தை, முதல்வர் ஸ்டாலின் நிதானமாகவும், பொறுப்புடனும் கையாளுகிறார். முதல்வருக்கு யாரையும் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லை. இதனால், நான் தி.மு.க., அரசுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம். நடுநிலையாக பார்க்கும் போது, எல்லாம் சரியாகவே நடக்கிறது. த.வெ.க., திட்டமிட்டு செய்யவில்லை; இது ஒரு விபத்து; அக்கட்சி நிர்வாகிகளுக்கு அனுபவம் குறைவு என்பதால், இது போன்று நடந்துள்ளது. விஜய் தார்மீக பொறுப்பு ஏற்று இருந்தால், நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருக்காது. ஆனால், தங்கள் மீது பழி வந்து விடும் என ஆலோசகர்களோ, வழக்கறிஞர்களோ கூறியதால், விஜய் அப்படி பேசி இருக்கலாம். பழனிசாமி, முதல்வர் பதவியில் இருந்து, மக்கள் வரிப்பணத்தை புசித்தவர். ருசி கண்ட பூனை போல, எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும் என்ற பதவி வெறியில், 'கரூரில் நடந்த மரண சம்பவத்துக்கு ஆட்சியாளர்களும், ஆளும்கட்சியும் தான் காரணம்; இது சதி,' என, த.வெ.க.,வின் வக்கீல் போல பழனிசாமி பேசி வருகிறார். தான் சார்ந்துள்ள கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என பழனிசாமி நினைக்கலாம். ஆனால், பழனிசாமியை ஆட்சிக்கு வர விடாமல், அவரை வீழ்த்தாமல் அ.ம.மு.க., ஓயாது. எனக்கு அ.தி.மு.க., மேல எந்த விரோதமும் கிடையாது. பழனிசாமியை தவிர, முதல்வர் வேட்பாளராக ராமசாமியோ, குப்புசாமியோ யாராக இருந்தாலும் எனக்கு ஒன்றும் இல்லை. துாத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது, பழனிசாமி, மக்களுக்கு ஆறுதல் சொல்ல உடனே அங்கு செல்லவில்லை. பயந்து கொண்டு ரொம்ப நாள் கழித்து சென்றார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், உடனே கரூருக்கு சென்றார். கரூரை வைத்து அரசியல் பேசும் தலைவர்களை, மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். கரூர் சம்பவத்தில் எம்.பி.,க்கள் குழுவை அமைத்து, பழனிசாமிக்கு நிகராக பா.ஜ.,வும் அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. துாத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில், இதுபோன்று எந்த குழுவும் வரவில்லை. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையின் கருத்து எனக்கு வருத்தம் அளிக்கிறது. அவரிடம் நான் பேசுவேன். த.வெ.க., நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் கூறிய கருத்துக்களை நீதிமன்றம் ஏற்காது. விழுப்புரம், மதுரை, திருச்சி, அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினத்தில் எத்தனை பேர் காயமடைந்தனர் என போலீசார் பட்டியல் கொடுத்துள்ளனர். அங்கு அசம்பாவிதம் நடந்திருந்தால், யாரை குறை கூறி இருப்பர். கரூரில், நடந்ததால், முன்னாள் அமைச்சர் ஒருவரை குறை கூறுகின்றனர். கடந்த 2006 முதல் செந்தில்பாலாஜி எனது நல்ல நண்பர். அரசியலில் வெற்றி பெற, அரசியல் ரீதியாக எதையும் செய்வார். ஆனால், இது போன்ற கொடூர புத்தி அவருக்கு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.