சேலம் : கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, விவசாய தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டத்தை, 'உழவர் பாதுகாப்பு திட்டம்' என, பெயர் மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், விவசாயம் முதன்மையான தொழிலாக கருதப்படுகிறது. 40க்கும் மேற்பட்ட தொழில்கள், விவசாயத்தை சார்ந்துள்ளன. அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய, மாநில அரசு உதவியுடன் உதவித் தொகை, கருணைத்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. 'விவசாய தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்டம்' என்ற பெயரில், கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை பெயர் மாற்றம் செய்து, 'உழவர் பாதுகாப்பு திட்டம்' என, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. திட்டத்தின்படி, ஒவ்வொரு விவசாயிக்கும் டோக்கன் வடிவிலான அடையாள அட்டை கொடுக்கப்படும். உழவர் பாதுகாப்புத் திட்ட அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டவுடன், அடையாள அட்டை கொடுப்பதற்கு, மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர். கடந்த ஆட்சியில் அறிவித்த திட்டத்தில், விவசாயிக்கு ஆணாக இருந்தால், 5,000 ரூபாய், பெண்ணாக இருந்தால், 3,000 ரூபாய் என, ஆண்டு தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், அவ்வாறே உதவித்தொகை அளிக்கப்படுகிறது. விபத்தில் விவசாயி இறக்க நேரிட்டால், 1.02 லட்ச ரூபாயும், இயற்கை மரணமடைந்தால், ஈமச்சடங்கு உதவித்தொகையாக, 12 ஆயிரத்து, 500 ரூபாயும், மாதாந்திர உதவித்தொகை, 500 ரூபாயும் வழங்கப்பட்டது. இப்புதிய திட்டத்தில் விவசாயிகளுக்கு, மேலும் சலுகைகள் அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.