சென்னை : 'திருவண்ணாமலையில், 32 லட்சம் ரூபாய் செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய சுற்றுலா வரவேற்பு மையம் கட்டப்படும்,' என தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில், சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையின் போது, அரசு வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: சுற்றுலா பயணிகள் வசதிக்காக, ஊட்டி, மாமல்லபுரம் சுற்றுலா வரவேற்பு மையங்கள், 50 லட்சம் ரூபாயில் மேம்படுத்தப்படும். திருவண்ணாமலையில், 32 லட்ச ரூபாயில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய சுற்றுலா வரவேற்பு மையம் கட்டப்படும். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக உருவாக்கப்படும். சிவகங்ககை செட்டிநாடு பகுதி, மருதுபாண்டியர் நினைவிடம், விருதுநகரில் இருக்கன்குடி, திருச்சுழி, திருத்தங்கல், நாகப்பட்டினத்தில் தரங்கம்பாடி, புதுக்கோட்டையில் மணமேல்குடி, ஆவுடையார்கோவில், சித்தன்ன வாசல், திருநெல்வேலியில் குற்றாலம், திருவாரூரில் மன்னார்குடி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.மேலும், அரியலூர், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கல மாதா, தூத்துக்குடி மணல் மாதா சர்ச்சுகளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான ஒன்பது படகு குழாம்களுக்கு, ஒரு கோடி ரூபாய் செலவில், 114 புதிய படகுகள் வாங்கப்படுவதுடன், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, ஐந்து ஏ.சி., பஸ்கள் வாங்கப்படும். முதல்வர் ஜெயலலிதா ஆணைப்படி, தமிழக சுற்றுலாக் கொள்கை விரைவில் வெளியிடப்படும். மேலும் திருக்கடையூர், திருக்கோஷ்டியூர், ராமேஸ்வரம், பழனி, நவக்கிரக ஆலயங்கள் உள்ளிட்ட ஆன்மிக சுற்றாலத் தலங்களில், பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படும். கலைப்பண்பாட்டுத் துறை அறிவிப்புகள்: கோவை, திருவையாறு அரசு இசை கல்லூரிகள் மற்றும் திருநெல்வேலி கலைபண்பாட்டு மையத்திற்கு, 2.60 கோடி ரூபாய் செலவில், கட்டிடம் கட்டப்படும். நடப்பாண்டில், கூடுதலாக, 500 நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மாணவர் பயன்பாட்டிற்காக அரசு இசை, கவின் கல்லூரிகளுக்கு, 39.65 லட்சம் ரூபாயில், தளவாடப் பொருட்கள் வாங்கப்படும். இசைக் கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது போல், இசைப் பள்ளி மாணவர்களுக்கும் மாதந்தோறும், 200 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். அருங்காட்சியம், தொல்லியியல் துறை அறிவிப்புகள்:நடமாடும் அருங்காட்சியகம் மற்றும் சிறுவர் அருங்காட்சியகத்தில், 75 லட்ச ரூபாயில், முப்பரிமான திரையரங்கம் அமைக்கப்படும். மரபுச் சின்னங்களை முழுமையாக பாதுகாத்திடவும், பராமரிப்பதை உறுதிப்படுத்தும் முகமாக,'தமிழ்நாடு மரபு ஆணையச் சட்டம்' ஏற்படுத்தப்படும். மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனை, தரங்கம்பாடி தேனிசு கோட்டையிலும், 15.50 லட்சம் ரூபாயில் இடிதாங்கிகள் அமைக்கப்படும். இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.