உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய தலைமைச் செயலகத்தில்கட்டுமானப் பணி முடிக்கக் கோரி மனு

புதிய தலைமைச் செயலகத்தில்கட்டுமானப் பணி முடிக்கக் கோரி மனு

சென்னை : புதிய தலைமைச் செயலகத்தில் கட்டுமானப் பணிகளை முழுமையாக செய்து முடிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை 9ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.வீரமணி தாக்கல் செய்த மனு: அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அனுமதிக்கப்பட்ட 1,092 கோடி ரூபாயில், 551 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாறியதும், தலைமைச் செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினர். புதிய கட்டடத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக, இந்தக் கட்டடத்தை தமிழக அரசு பயன்படுத்தாமல் உள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, விசாரணை கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப, புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் கைவிடுவது சரியல்ல. மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்படக் கூடாது. புதிய கட்டடம் மூடப்பட்டுள்ளது. அங்குள்ள பொருட்களை பாதுகாக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இரவு நேரங்களில் விளக்குகளை அணைத்து விடுகின்றனர். போதிய விளக்குகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால், அந்தக் கட்டடத்தை பயன்படுத்த முடியாமல் வீணடிக்க அரசு முயற்சிக்கிறது. புதிய தலைமைச் செயலக கட்டடத்துக்கு விளக்கு வசதிகள், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு உத்தரவிட வேண்டும். எதற்காக கட்டடம் கட்டப்பட்டதோ, அந்த காரணத்துக்கு அல்லாமல் வேறு காரணங்களுக்காக ஒப்படைக்கக் கூடாது. அங்கு பராமரிப்பு பணிகள், கட்டுமானப் பணிகளை தொடர்ந்து, முழுமையாக செய்து முடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் டி.முருகேசன், சசிதரன் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசுக்கு முறையீட்டு மனு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறி அதன் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார். முறையீட்டு மனு அரசுக்கு வந்துள்ளதா, அப்படி வந்திருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, விளக்கம் பெற்று தெரிவிப்பதாக அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறினார். இதையடுத்து, விசாரணையை வரும் 9ம் தேதிக்கு 'டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை