| ADDED : செப் 01, 2011 12:14 AM
திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில், சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. ஆக., 23ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 9ம் திருநாளான நேற்று காலை, 9.50 மணிக்கு, தேரில் கற்பக விநாயகர் எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர். மாலை 4.30 மணிக்கு, மூலவருக்கு சந்தனக் காப்பு சிறப்பு அலங்காரம் நடந்தது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சந்தனக்காப்பு அலங்கார கற்பக விநாயகரை, ஏராளமானோர் தரிசித்தனர். மாலை 4.50 மணிக்கு அறங்காவலர்கள் ராமநாதன் செட்டியார், சிதம்பரம் செட்டியார் ஆகியோர் வடம்பிடிக்க, தேரோட்டம் துவங்கியது. திரளாக பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்துச் சென்றனர். தொடர்ந்து சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை பெண் பக்தர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் உற்சாகத்துடன் இழுத்துச் சென்றனர். இரவில், யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, காலை விநாயகரின் பிரதிநிதியான அங்குசத்தேவருக்கு திருக்குளத்தில், உற்சவர் முன்னிலையில் தீர்த்தவாரி நடைபெறும். தொடர்ந்து மதியம் 18 படி அரிசியில் செய்யப்பட்ட மோதகம் எனப்படும் பிரமாண்ட கொழுக்கட்டை விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கப்படும்.