பொள்ளாச்சி : பொள்ளாச்சி கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் உலர்களத்தை, அந்தமான் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அந்தமான் தேசிய தோட்டக்கலைத் துறை, உயர்தர வேளாண் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், அதிகாரிகள் ஒன்பது பேர், விவசாயிகள், 26 பேர், தமிழகம் வந்துள்ளனர். இவர்கள், பொள்ளாச்சி கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் உலர்களத்தை நேற்று பார்வையிட்டனர். விற்பனை அபிவிருத்தியாளர் தங்கவேல், சோலார் உலர்களம் குறித்து விளக்கினார். அந்தமான் குழு தலைவரும், வேளாண் அதிகாரியுமான தனியரசு கூறியதாவது: அந்தமானில், தென்னை பிரதான விவசாயமாக உள்ளது; இதையடுத்து, பாக்கு சாகுபடி உள்ளது. ஆண்டுக்கு, எட்டு மாதம் மழை பொழிவு அதிகமாக இருக்கும். இதனால், தேங்காயில் இருந்து கொப்பரை உற்பத்தி செய்வது சிரமமாக இருக்கிறது. அங்குள்ள விவசாயிகள், அடுப்பில் நெருப்பு மூட்டி, பெரிய தகரத்தை வைத்து, அதன் மீது தேங்காயை பரப்பி, கொப்பரை உற்பத்தி செய்கின்றனர். அம்முறையில், தரமான கொப்பரை உற்பத்தி செய்ய முடிவதில்லை. பொள்ளாச்சியில் அமைக்கப்பட்டுள்ள சோலார் உலர்களம், அந்தமான் சீதோஷ்ண நிலைக்கு பொருத்தமாக இருக்கும். லேசான வெயில் இருந்தாலே, கொப்பரை உற்பத்தி செய்ய முடியும். அந்தமானிலும் இத்திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்வோம். இவ்வாறு தனியரசு தெரிவித்தார்.
வழிகாட்டியது 'தினமலர்' : வேளாண் அதிகாரி தனியரசு கூறுகையில், ''தமிழகம், கேரளத்தில், சொட்டுநீர் பாசனம், இயற்கை வேளாண்மை, மார்க்கெட்டிங் முறைகள் குறித்து தெரிந்துக் கொண்டோம். கடந்த 30ம் தேதி, 'தினமலர்' நாளிதழில் வெளியிடப்பட்ட சோலார் உலர்கள செய்தியை கண்டு, இங்கு வந்தோம். ''சோலார் உலர்களம், அந்தமான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்; இதற்கு, 'தினமலர்' நாளிதழ் தான் வழிகாட்டியுள்ளது. தேனி மாவட்டத்தில், வாழைப்பழத்தை பழுக்க வைக்கும் குடோன்களை பார்வையிட்டு, மூணாறு வழியாக கொச்சியில் நடக்கும் தோட்டக்கலைத் துறை கண்காட்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.