| ADDED : செப் 01, 2011 02:09 AM
ராஜபாளையம் : ''இலங்கையில் விநாயகர் கோயில் அமைக்க தடைவிதிக்கின்றனர்,'' என, இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி., யோகேஸ்வரன் கூறினார்.ராஜபாளையம் வந்த அவர் கூறியதாவது: இலங்கை சண்டையில், 1471 கோயில்கள் பாதிக்கப்பட்டன. இந்துக்களின் பூர்வீக இடங்கள் அழிக்கப்பட்டு, புத்த கோயில்களாக மாறுகின்றன. கன்னியாதவற்றில், ஏழு வித சுடுநீர் ஊற்றுடன் இருந்த விநாயகர் கோயில் சிலைகள் உடைக்கப்பட்டன. இன்று, அதன் அருகே புத்தகோயில் கட்டப்படுகிறது. விநாயகர்கோயில் அமைக்க தடை விதிக்கின்றனர். இலங்கை அரசின் புனரமைப்பு நிதி, போதுமானதாக இல்லை. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவில்லை.இந்தியா வழிகாட்டுதலின்படி, இலங்கை அரசுடன் பேசியும் பலன் இல்லை. ராஜிவ் -ஜெயவர்த்தனா ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கை கட்டுமான பணியில் சீனர்கள் உள்ளனர். தகர கொட்டகையில் தான் தமிழர்கள் வாழ்வு தொடர்கிறது, என்றார்.