உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுதும் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., அதிரடி

தமிழகம் முழுதும் போலீஸ் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., அதிரடி

சென்னை ; குற்ற வழக்குகள் விசாரணைக்காக, தமிழக காவல் துறையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் அனைத்தையும் கலைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை என்ற பெயரில், கோவில் காவலாளியை தனிப்படை போலீசார் அடித்து கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கையை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் எடுத்துள்ளார்.சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார், 27; கோவில் காவலாளி. நகை மற்றும் பணம் திருடியதாக, அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார், விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை பிடித்து அடித்து, சித்ரவதை செய்ததில், அவர் உயிரிழந்தார். இந்நிலையில், 'மாநிலம் முழுதும் எஸ்.பி.,க்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் செயல்பட்டு வரும் தனிப்படை போலீசார், குற்ற வழக்கில் சிக்கும் நபர்கள் மற்றும் விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்களை கடுமையாக தாக்குகின்றனர். 'அப்படித்தான், துாத்துக்குடி மாவட்டத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோரை அடித்துக் கொன்றனர். தற்போது அஜித்குமாரும் தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்' என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, எஸ்.பி.,க்கள், துணை கமிஷனர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் என, பல்வேறு நிலைகளில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை கலைத்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:காவல் துறை துவங்கிய காலத்தில் இருந்தே தனிப்படைகள் அமைத்து, குற்ற வழக்குகளில் சிக்கும் நபர்கள் மற்றும் சந்தேக நபர்களிடம் விசாரிக்கும் நடைமுறைகள் உள்ளன. தற்போதும் கூடுதல் டி.ஜி.பி.,க்கள் துவங்கி, எஸ்.பி.,க்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் நிலையில் உள்ள அதிகாரிகளின் கீழ் தனிப்படைகள் செயல்பட்டு வருகின்றன.அவ்வாறு அமைக்கப்படும் தனிப்படைகள் நிரந்தரமாக செயல்படுவது தான், பிரச்னைக்கு வழி வகுக்கிறது. தனிப்படை போலீசார், அடியாட்கள் போலத்தான் செயல்படுகின்றனர். அடித்து, சித்ரவதை செய்து, உண்மையை வரவழைப்பது தான் தனிப்படை போலீசாரின் விசாரணை பாணி. குற்ற வழக்கில் சிக்கும் நபர்கள், சந்தேக நபர்களிடம் எப்படி விசாரிக்க வேண்டும்; அவர்களை அடிப்பது போல நடித்து, உண்மையை கறப்பது எப்படி என போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போதுள்ள தனிப்படை போலீசார், வசூல் வேட்டைக்கு தான் பயன்படுத்தப்படுகின்றனர்; சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்காமல், அதிகாரிகள் பிறப்பித்த கட்டளைகளை நிறைவேற்றும் அடியாட்களாகவே செயல்படுகின்றனர். இதனால், அதிகாரிகளின் கீழ் செயல்படும் தனிப்படைகளை உடனடியாக கலைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அது பற்றிய விபரங்களை, 24 மணி நேரத்திற்குள், டி.ஜி.பி., அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டு உள்ளது.சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு, சி.பி.சி.ஐ.டி., உள்ளிட்ட சிறப்பு பிரிவு போலீசாரால், குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை என்ற நிலை ஏற்படும்போது மட்டும், போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.,க்களின் அனுமதி பெற்று, தனிப்படைகளை அமைக்கலாம். சிறப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மற்றும் ஐ.ஜி.,க்கள் உத்தரவுகள் இன்றி, இனிமேல் தனிப்படைகளை அமைக்கக் கூடாது. அவர்களுக்கான விசாரணை பணிகள் முடிந்த உடனே தனிப்படையை கலைத்து விட வேண்டும் என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பறக்கும் உத்தரவுகள்

* இரவு 7:00 மணிக்கு மேல் காவல் நிலையங்களில் விசாரணை நடத்தக்கூடாது. கைது நடவடிக்கை இருந்தால், மாலை 6:00 மணிக்குள் அதற்கான நடைமுறைகளை முடித்துவிட வேண்டும்.* குடி போதையில் தகராறு செய்யும் நபர்கள், பொது மக்கள் பிடித்து கொடுக்கும் நபர்களை, காவல் நிலையம் அழைத்து வரக்கூடாது. அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். அதன்பின், விசாரணையை துவக்கலாம்.* விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர் பதற்றத்தில் இருக்கலாம் அல்லது அவரது உடலில் வேறு விதமான பிரச்னைகள் இருக்கலாம். மருத்துவமனையில் சேர்த்து, உடல் நலன் குறித்து அறிந்த பின் விசாரிக்க வேண்டும்.* விசாரணையின்போது, காவல் நிலையத்தில் கண்டிப்பாக இன்ஸ்பெக்டர்கள் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே தனிப்படைகளை அமைக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை, டி.எஸ்.பி., மற்றும் உதவி கமிஷனர்கள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு பல உத்தரவுகள், மாநிலம் முழுதும் உள்ள போலீசாருக்கு பறந்துள்ளன.

ஐ.ஜி., - எஸ்.பி.,க்களுக்கு 'டோஸ்'

கோவில் காவலாளி அஜித்குமார் இறப்புக்கு போலீசார் தான் காரணம் என தகவல் கிடைத்த உடனேயே, டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, அஜித்குமார் விவகாரம் தொடர்பாக, தனக்கு போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து தரப்பட்ட தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக முதல்வர் கடிந்து கொண்டார். சட்டம் - ஒழுங்கு பிரச்னையை போலீஸ் அதிகாரிகள் கையாளும் முறையில் திருப்தி இல்லை என்றும் அவர் குறை கூறியிருக்கிறார்.அதை தொடர்ந்து, நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மண்டல ஐ.ஜி.,க்கள், சரக டி.ஐ.ஜி.,க்கள் மற்றும் எஸ்.பி.,க்களுடன், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அப்போது, ரவுடிகள் ஒழிப்பு, குற்றங்கள் தடுப்பு, கைது எண்ணிக்கையை அதிகரிப்பது, தண்டனைகளை பெற்று தருவது தொடர்பாக சரமாரியாக கேள்விகள் எழுப்பிஉள்ளார். அவரின் பேச்சு எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக இருந்துள்ளது. உளவு தகவல்கள் கிடைத்த அடுத்த வினாடியே, போலீஸ் அதிகாரிகள் செயல்படுவது இல்லை என்றும் 'டோஸ்' விட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

beindian
ஜூலை 03, 2025 20:04

சுடாலினுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வராது.


sankaranarayanan
ஜூலை 03, 2025 19:01

முதலில் ஜால்ரா தாளம் போடு இந்த டி ஜி பையை மாற்ற வேண்டும்.இவர் வந்தது முதலே போலீசு அடக்குமுறை அராஜகம்தான் தலை தூக்கி உள்ளது. தனியாக நேர்மையாக எந்த முடிவும் எடுக்க இவருக்கு தைரியம் இல்லை.சொல்லும் செயல்களுக்கு மாட்டும் இவர் ஆணை பிறப்பித்து அரசு கிளிப்பிள்ளை போன்று ஆடுகிறார்.


M Ramachandran
ஜூலை 03, 2025 18:19

திறமைற்ற பதவியின் மதிப்பு தெரியாத சங்கர் திவால் முதலில்பதவியை விட்டு விலகிடல் நலம்


ராஜா
ஜூலை 03, 2025 17:20

காசுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் இந்த துறை.


venugopal s
ஜூலை 03, 2025 15:43

எல்லாம் சரி தான், அங்கு காஷ்மீரில் அந்த நான்கு தீவிரவாதிகளை இன்று வரை கண்டு பிடிக்க முடியாத மத்திய பாஜக அரசை என்ன செய்யலாம்? பாராட்டி விழா எடுக்கலாமா?


sekar ng
ஜூலை 03, 2025 14:30

தமிழக காவல்துறை மந்திரி ஸ்டாலின் பதவி விலக வேண்டும். காவல்துறை க்கு புது பயிற்சி கொடுக்கவேண்டும்


கண்ணன்
ஜூலை 03, 2025 11:41

முதலில் டி ஜி பி யை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் இவரைத் தேர்ந்தெடுத்த யு பி எஸ் ஸி அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 03, 2025 10:32

நம் தமிழனுக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லையே. நாட்டில் எவ்வளவு அநியாயங்கள் நடந்தாலும் ஆடு மாடு மாதிரி போகிறார்கள். அதற்க்கு கூட கொஞ்சம் உணர்ச்சி இருக்கும். இதெற்க்கெல்லாம் மூல காரணம் டாஸ்மார்க். அதுதான் ஆட்சிக்கு வருபவர்களின் துருப்பு சீட்டு. மதுவை ஒழித்தால் மட்டுமே எல்லாவற்றையும் சரி செய்ய முடியும். அதனால் தான் இந்த திருட்டு கழகத்தினர் அதை ஒழிக்காமல் மக்களை சிந்திக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். அதனால் இனி எதுவும் மாறாது. போய் உங்க வேலைய பாருங்க.


Nagarajan D
ஜூலை 03, 2025 09:56

பேசாம காவல்துறையையே கலைத்துவிட்டு இவனுங்கள ஆளும் கட்சிகளின் ஏவல் துறை என்று பெயர்மாற்றம் செய்துவிடலாம்


மூர்க்கன்
ஜூலை 03, 2025 14:03

அப்படியே அந்த சி பி ஐ, அமுல் துறை எல்லாத்தையும் கலைச்சிடலாமா?


Nagarajan D
ஜூலை 03, 2025 18:27

மூர்க்கனுங்களையும் அழிச்சிட்டா உலகமே அமைதியா இருக்கும்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2025 09:05

ஹிம்சை அரசரின் காமெடி தர்பார் ...... வேறென்ன சொல்ல ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை