உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதலில் முறைகேடு நடந்தால் மண்டல மேலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

நெல் கொள்முதலில் முறைகேடு நடந்தால் மண்டல மேலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

சென்னை:'நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மின்னணு முறையின், இ - டி.பி.சி., மென்பொருள் வாயிலாக தான் நெல்லுக்கான தொகையை செலுத்த வேண்டும். இதை பின்பற்றாத முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் எச்சரித்துள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழக விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை, நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் கார்டுதாரர் களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இம்மாதம், 1ம் தேதி துவங்கிய நடப்பு நெல் கொள்முதல் சீசன், 2026 ஆகஸ்டில் முடிவடைகிறது. நெல் கொள்முதலின் போது பின்பற்றப்பட வேண்டியவை குறித்து, அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்களுக்கு, நுகர்பொருள் வாணிப கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கோணியில் நெல் பிடிப்பதற்கு முன், குறியீட்டு எண் விபரங்கள் குறிக்கப்பட வேண்டும். அச்சு குறியீடுகள் குறிக்கப்படாமல், எந்த கோணியிலும் நெல் பிடிக்க கூடாது. அவ்வாறு கண்டறியப்பட்டால், கொள்முதல் பணியாளர்கள் உடனே விடுவிக்கப்படுவர். மின்னணு முறையின்படி, நெல் கொள்முதல் செய்யும் போது, அனைத்து மண்டலங்களும், இ - டி.பி.சி., மென்பொருள் வாயிலாக தான் தொகையை செலுத்த வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட மண்டல மேலாளர்கள், கலெக்டருடன் தொடர்பு கொண்டு, நெல் கொள்முதலுக்கான தொகையை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்த வேண்டும். இ - டி.பி.சி., மென்பொருள் முறையை பின்பற்றாத முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது, உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில், எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் அளிக்காமல், இ.சி.எஸ்., வாயிலாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். திறந்தவெளி சேமிப்பு நிலையத்தில், நெல் மூட்டை இறக்குவதற்கான தளவாட பொருட்களை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மேலாளர், தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், மண்டல இயக்க பிரிவு அதிகாரிகள் பொறுப்பாக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, கண்காணிக்க வேண்டும். முறைகேடுகள் கண்டறியப்பட்டால், முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கொள்முதல் நிலை யங்களிலும் மண்டல அலுவலகங்களின் அலைபேசி, தொலைபேசி எண்களை பூர்த்தி செய்து, விவசாயிகள் பார்வைக்கு வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் முதுநிலை மண்டல மேலாளர் உள்ளிட்டோர் மீது, பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக, வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை