நான்கு கவுன்சிலர்களின் தகுதி நீக்க உத்தரவு ரத்து
சென்னை:சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சிஆகியவற்றின் நான்கு கவுன்சிலர்களை தகுதி நீக்கம் செய்ததை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கூறி, சென்னை மாநகராட்சியின், 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப் பட்டனர். மேலும், தாம்பரம் மாநகராட்சியின் 40வது வார்டு கவுன்சிலரும், மண்டல குழு தலைவருமான ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும், 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப் பட்டனர். நகராட்சி நிர்வாகத் துறையின் இந்த உத்தரவுகளை எதிர்த்து நான்கு பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை, நீதிபதி என்.மாலா விசாரித்தார். இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நோட்டீஸ்களுக்கு கவுன்சிலர்கள் அளித்த பதிலை, எந்த காரணமும் தெரிவிக்காமல் அரசு நிராகரித்துள்ளது. விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கப்படவில்லை என்பதால், நான்கு பேரின் பதவி நீக்க உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்துறை, நான்கு பேரின் பதிலை பரிசீலித்து, விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கி, சட்டப்படி நான்கு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.