சென்னை : “அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவரும், தாலுகாக்களை, கோட்டங்களை பிரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். நிதி நிலைமைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்,” என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - ஈஸ்வரன்: திருச்செங்கோடு தொகுதிக்கு உட்பட்ட, மல்லசமுத்திரத்தை புதிய தாலுகாவாக உருவாக்க வேண்டும். மல்லசமுத்திரம் குறுவட்டத்திற்கு ஒருபுறம் திருச்செங்கோடு வட்டம், மற்றொரு புறம் ராசிபுரம் வட்டம் உள்ளது. திருச்செங்கோடில் ஆறு குறுவட்டங்கள் உள்ளன. இவற்றில், 3.29 லட்சம் மக்கள் உள்ளனர். ராசிபுரம் வட்டத்தில், ஐந்து குறுவட்டங்கள் உள்ளன. அதில், 3.39 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.இரண்டு வட்டங்களும் மிகப்பெரிதாக உள்ளன. ராசிபுரம் வட்டத்தில் இருந்து, வெண்ணந்துார் குறுவட்டம். திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள வையப்பம்மலையம் குறுவட்டம் ஆகியவற்றை, மல்லசமுத்திரம் குறுவட்டத்துடன் சேர்த்து, புதிய குறுவட்டம் உருவாக்க வேண்டும்.அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்: விதிமுறைப்படி சாத்தியமில்லை. நிறைய எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் என அனைவரும், தாலுகாக்கள் மற்றும் கோட்டங்களை பிரித்து தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.தி.மு.க., பரந்தாமன்: சென்னை எழும்பூர் தாலுகாவை இரண்டாக பிரிக்க வேண்டும்.அமைச்சர் ராமச்சந்திரன்: சென்னையை பொறுத்தவரை, ஒவ்வொரு தாலுகாவிலும், மக்கள் தொகை அதிகம் உள்ளது. தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்யும்.தி.மு.க., - அரவிந்த் ரமேஷ்: சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகம், தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. தாலுகாவை இரண்டாக பிரிக்க வேண்டும். அமைச்சர் ராமச்சந்திரன்: தாலுகாவை பிரிக்க வேண்டிய அவசியத்தை அரசு உணர்ந்துள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.