தி.மு.க., - -ஐ.டி., விங் பணியாளர்களுக்கு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பதவியா?
சென்னை: தி.மு.க., தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை, ஏ.பி.ஆர்.ஓ., எனப்படும், அரசின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களாக நியமிக்க முயற்சி நடப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு, 'பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது ஊடக அறிவியல் படிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பப்பெற, தி.மு.க., அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.தகுதியற்றவர்களையும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களையும் ஏ.பி.ஆர்.ஓ.,க்களாக நியமிக்கவே, இது போன்ற நடவடிக்கைகளில் தி.மு.க., அரசு இறங்கி உள்ளது. டாக்டராவதற்கு மருத்துவ படிப்பும், வழக்கறிஞராவதற்கு சட்டப் படிப்பும் அவசியம் என்பது போல, ஏ.பி.ஆர்.ஓ., பணிக்கு, பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமா அல்லது பட்டப் படிப்பு அவசியம் என்பது அரசாணையில் தெளிவாக உள்ளது. இந்நிலையில், பத்திரிகை துறையில் அனுபவமோ, தகுதியோ இல்லாத தி.மு.க.,- - -ஐ.டி., விங் பணியாளர்களை, ஏ.பி.ஆர்.ஓ.,க்களாக நியமிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.இது, அவர்களை தேர்தல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் உள்நோக்கமாக தெரிகிறது.தற்காலிக நியமனம் என்ற பெயரில், தகுதியற்றவர்களை நியமிக்கும் முயற்சியை உடனடியாக கைவிட்டு, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாகவே ஏ.பி.ஆர்.ஓ.,க்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.