உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொட்டை பாக்கு இறக்குமதியில் முறைகேடு துாத்துக்குடியில் தி.மு.க., கவுன்சிலர் கைது

கொட்டை பாக்கு இறக்குமதியில் முறைகேடு துாத்துக்குடியில் தி.மு.க., கவுன்சிலர் கைது

துாத்துக்குடி:'கொட்டை பாக்குகள் வாயிலாக, அதிகளவு புகையிலை பொருட்கள் தயாரிக்கப்படுவதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய, 100 சதவீதம் வரி செலுத்த வேண்டும்' என மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது. இருப்பினும், சிலர் வேறு பொருட்களை இறக்குமதி செய்வதாக ஆவணங்களை தயார் செய்து, இந்திய துறைமுகங்கள் வழியாக கொட்டை பாக்குகளை இறக்குமதி செய்து வருகின்றனர். கடந்த நவம்பரில் இந்தோனேஷியாவில் இருந்து துாத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த ஒரு கப்பலில், 23 டன் கொட்டை பாக்குகள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.முந்திரி பருப்பு இறக்குமதி செய்வதாக ஆவணங்கள் இருந்த நிலையில், ஒரு கோடியே, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கொட்டை பாக்குகள், கன்டெய்னர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்; தொடர் விசாரணை நடந்தது. இந்த விவகாரத்தில் சுங்க துறையினரிடம் தவறான ஆவணங்களை காண்பித்து, முறைகேட்டில் ஈடுபட்டது துாத்துக்குடி மாநகராட்சி, 18வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சீனிவாசன் என்ற ஜான், 50, என, தெரியவந்தது.மேலும், கடத்தலுக்கு உடந்தையாக தனியார் நிறுவனத்திடம் இருந்து வங்கி கணக்கில், 2 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் பெற்றிருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இரு நாட்களுக்கு முன் அவரை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மருத்துவ பரிசோதனைக்கு பின், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் வேறு சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், தீவிர விசாரணை நடப்பதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !