கரும்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது தி.மு.க., அரசு: ராமதாஸ்
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:பஞ்சாப் மாநிலத்தில், நடப்பு அரவை பருவத்தில் ஒரு டன் கரும்பு, 4,100 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும் என, அம்மாநில முதல்வர் பகவந்த்சிங் மான் அறிவித்திருக்கிறார். இதன் வாயிலாக, இந்தியாவிலேயே கரும்புக்கு அதிக கொள்முதல் விலை வழங்கும் மாநிலம் என்ற பெருமையை, பஞ்சாப் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் நடப்புப் பருவத்தில் ஒரு டன்னுக்கான கொள்முதல் விலை, 3,150 மட்டும் தான். இது மத்திய அரசு அறிவித்த விலைதான். தமிழக அரசு சார்பில், கடந்த ஆண்டு டன்னுக்கு, 215 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், நடப்பாண்டில் ஊக்கத்தொகை எதுவும் அறிவிக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் வழங்கப்படுவதை விட, தமிழகத்தில் டன்னுக்கு, 950 ரூபாய் குறைவாக கொள்முதல் விலை வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு கணக்கிட்டு பார்த்தால், ஒவ்வொரு விவசாயிக்கும் 38,000 ரூபாய் இழப்பு ஏற்படும். இப்படியெல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதுதான், தி.மு.க., அரசின் சாதனையா?தமிழகத்தில் ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு, 3,500 ரூபாய் செலவாகும்போது, 50 சதவீதம் லாபமாக 1,750 ரூபாய் சேர்த்து டன்னுக்கு, 5,250 ரூபாய் கொள்முதல் விலை வழங்க வேண்டும்; குறைந்தது 5,000 ரூபாயாவது வழங்க வேண்டும். இதில், மத்திய அரசு அதன் கொள்முதல் விலையாக டன்னுக்கு, 4,000 ரூபாய் அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அதன் பங்குக்கு சர்க்கரை ஆலைகள் வாயிலாக, 1,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்க வேண்டும். இதன் வாயிலாக, டன் கரும்புக்கு, 5,000 ரூபாய் கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.