உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வியில் சிறந்த தமிழகத்தை கொலை களமாக தி.மு.க., அரசு மாற்றி விட்டது: பழனிசாமி

கல்வியில் சிறந்த தமிழகத்தை கொலை களமாக தி.மு.க., அரசு மாற்றி விட்டது: பழனிசாமி

சென்னை: 'அ.தி.மு.க., ஆட்சியில் கல்வியில் சிறந்து விளங்கிய தமிழகத்தை கொலை களமாக தி.மு.க., அரசு மாற்றி விட்டது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

துாத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில், இரண்டு மாணவர்கள் காயமடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஒரு மாணவருக்கு, கை முழுமையாக சிதைந்துள்ளதாகவும், மற்றொரு மாணவருக்கு கண்ணில் காயம் எனவும் செய்திகள் வருகின்றன. 'கல்வியிற் சிறந்த தமிழகம்' என்ற புகழோடு அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த தமிழகத்தை, தி.மு.க., அரசு, பள்ளி மாணவர்கள் இடையே கத்திக்குத்து, புத்தகப் பையில் அரிவாள், அரசு கல்லுாரிக்குள் நாட்டு வெடிகுண்டு என்ற நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அரசு கல்லுாரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும், வழக்கம் போல் தனிப்பட்ட காரணம் என கூறி நியாயப்படுத்த, தி.மு.க., அரசு நினைத்தால், அதற்கு இப்போதே வெட்கி தலை குனிந்து கொள்ளட்டும். அரசு கல்லுாரிக்குள் நாட்டு வெடிகுண்டு வரும் அளவிற்கு, சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் நிலையில், இப்போதாவது முதல்வர் ஸ்டாலின் விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பாரா? நான் அரசியல் ரீதியான விமர்சனங்கள் வைத்தால் மட்டும் பாய்ந்து வந்து, வீர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின், மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் - ஒழுங்கு குறித்து கேட்டால் மட்டும், பம்மி பதுங்கிக் கொள்வது ஏன்? படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல. நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து, உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுதங்கள், வெடிகுண்டு என தமிழகத்தை கொலை களமாக மாற்றி வரும், தி.மு.க., ஆட்சியிடம் இருந்து மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ