உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உத்தரவிட்டும் தி.மு.க., அரசு பிடிவாதம்! தீபம் ஏற்றாததால் திருப்பரங்குன்றத்தில் தீராத பதற்றம்

 நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உத்தரவிட்டும் தி.மு.க., அரசு பிடிவாதம்! தீபம் ஏற்றாததால் திருப்பரங்குன்றத்தில் தீராத பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை மீண்டும் உத்தரவிட்டதை நேற்றும் அமல்படுத் தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் திருப்பரங்குன்றத்தில் தீராத பதற்றம் நீடிக்கிறது. திருக்கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி கோயில் சார்பில் மலையில் உள்ள உச்சிபிள்ளையார் கோயில் அருகில் உள்ள வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதேசமயம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில்தான் முறையாக தீபம் ஏற்றவேண்டும் எனவும், அதனை அமல்படுத்த உத்தரவிடக்கோரியும் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார், ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், ஹிந்து முன்னணி சட்டப்பிரிவு செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சி வரை நேரில் சென்று ஆய்வு செய்து, 'தீபம் ஏற்றலாம்' என உத்தரவிட்டார். இதை எதிர்பார்க்காத அறநிலையத்துறை, உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இம்மனு ஏற்கப்படாத நிலையில், நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை எனக்கூறி நேற்றுமுன்தினம் மாலை ராம ரவிக் குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மனுதாரரான ரவிக்குமார் உட்பட 10 பேர் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் மலைக்கு சென்று தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.

தி.மு.க., அரசுக்கு குட்டு

இதைதொடர்ந்து மலைக்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதை தடுக்க திருப்பரங்குன்றத்தில் அவசரம் அவசரமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை காரணம் காட்டி பாதுகாப்பு படை வீரர்களை போலீசார் தடுத்தனர். மனுதாரர் ரவிக்குமார் தலைமையில் ஹிந்து அமைப்பினர் போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அரசின் கொள்கை முடிவால் கமிஷனர் அனுமதி மறுத்ததால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க மலை பாதை முன் சாலையில் கார்த்திகை தீபத்தை ஏற்றிவிட்டு ராம ரவிக்குமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலைந்து சென்றனர். இரண்டாம் நாளான நேற்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் தமிழக அரசு அப்பீல் செய்தது. முதல் வழக்காக விசாரித்த அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டதோடு, நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கை ஜி.ஆர். சுவாமிநாதனே விசாரிப்பார் என உத்தரவிட்டது.

144 தடை உத்தரவு ரத்து

இதைதொடர்ந்து அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், காணொலியில் கலெக்டர் பிரவீன்குமார், கமிஷனர் லோகநாதனிடம் விசாரித்தார். அவர்களின் பதில்கள் ஏற்கும்படியாக இல்லாததால், இன்றிரவு (நேற்று) 7:00 மணிக்குள் மனுதாரர்(ராம ரவிகுமார்) தீபம் ஏற்ற வேண்டும். அவருக்கு கமிஷனர் லோகநாதன் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தீபம் ஏற்றியது குறித்து நாளை(இன்று) காலை 10:30 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார். இதை கேள்விபட்ட ஹிந்து அமைப்பினரும், பக்தர்களும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். திருப்பரங்குன்றத்திலும் தீபம் ஏற்றுவதை காண குவிந்தனர். ராம ரவிக்குமார், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மலைக்கு செல்ல தயாரான போது, '144 தடை உத்தரவை நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதால் அனுமதிக்க முடியாது' என கமிஷனர் லோகநாதன் அறிவித்தார். இதனால் மீண்டும் பதற்றம் உருவானது. இரவு 8:00 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. இச்சூழலில் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் கூடியதாக நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, திருமுருகன், முருகன்ஜி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். தி.மு.க, அரசின் தொடர் பிடிவாதத்தால் திருப்பரங்குன்றத்தில் தொடர் பதற்றம் நீடிக்கிறது. இதற்கிடையே இருநீதிபதி அமர்வு அளித்த உத்தரவுக்கு எதிராக நேற்றிரவு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர அவசரமாக மேல்முறையீடு செய்தது.

கலவர நோக்கில் தமிழக அரசு

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபமேற்ற உயர்நீதி மன்றம் 3 முறை உத்தரவிட்டுள்ளது. இன்றைய(நேற்று) உத்தரவில் மனுதாரருக்கு மதுரை போலீஸ் கமிஷனர் பாதுகாப்பு அளித்து செல்ல வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. ஒரு மணி நேரமாக நாங்கள் இங்கு நின்று கொண்டிருக்கிறோம். ஆனால் போலீஸ் கமிஷனர் இங்குவரவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். தமிழக அரசு ஹிந்துக்களையும், ஹிந்துக்களின் உணர்வையும் மதிக்கவில்லை. திருப்பரங்குன்றம் எந்தப் பிரச்னையும் இல்லாத அமைதியான ஊர். இங்கு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் தமிழக அரசு, போலீசாரின் நடவடிக்கை உள்ளது. நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம். ராம ரவிகுமார் தரப்பு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன்: திருப்பரங்குன்றம் தொடர்பாக நீதிமன்றத்தில் அரசின் மேல்முறையீடு தள்ளுபடியாகி விட்டது. அதன்பின்னும் இரவு 8:30 மணி வரை நீதிமன்ற உத்தரவை போலீசார் மதிக்கவில்லை. மாலை 4:30 மணிக்கு நீதிமன்றம் அளித்த மற்றொரு உத்தரவையும் மதிக்கவில்லை. இரண்டாவது நாளாகவும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை திட்டமிட்டே தமிழக அரசு மறுத்துள்ளது. இது ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் நோக்குடன் தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவை கொஞ்சமும் மதிக்கவில்லை. நீதிமன்றம்தான் தமிழகத்தின் உயர்ந்த பட்ச அமைப்பு. அடுத்து டில்லிதான். நீதிமன்ற உத்தரவை, குறிப்பாக மதுரை போலீசார் மதிக்கவில்லை. 144 அமலில் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் திருப்பரங்குன்றத்தில் இயல்பான நிலையே உள்ளது. எந்த பிரச்னையும் இல்லை. அசாதாரணமான ஒரு சூழலை உருவாக்கி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் இவ்விவகாரத்தில் போலீசார் செயல்படுகின்றனர். திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை அரசே உருவாக்குகிறது. நாங்கள் நீதிமன்றத்தையே நம்பியுள்ளோம். போலீஸ் கமிஷனரோடு தீபம் ஏற்ற செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 100 மீட்டர் தொலைவில்தான் கமிஷனர் இருக்கிறார். நாங்கள் வந்து ஒன்றரை மணிநேரம் ஆனபின்பும், கமிஷனர் வரவில்லை. இது தவறான ஒரு முன்னுதாரணம். மற்ற மாநிலங்களிலும் இதேநிலையை பின்பற்றினால் நீதித்துறை என்பதே கேள்விக்குறியாகும். இவ்வாறு அவர் கூறினார். உயர்நீதிமன்றம் மூன்றாவது முறையாக உத்தரவிட்டும், தீபம் ஏற்றப்படாமல் அனைவரும் இரவு 9:00 மணி அளவில் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

கமிஷனர் எங்கே

மனுதாரரான ராம ரவிக்குமார், 'நீதிமன்றம் உத்தரவுபடி போலீஸ் கமிஷனர் பாதுகாப்புடன் மலைக்கு செல்ல வேண்டும் என்பதால் அவருக்காக காத்து கொண்டிருக்கிறேன்' என இரவு 9:00 மணி வரை மலைப்பாதை அருகே காத்திருந்தார். ராம ரவிக்குமார் இருக்கும் இடத்திற்கு வந்தால் நீதிமன்ற உத்தரவு காரணமாக அவரை மலைக்கு அழைத்துச்செல்ல வேண்டியிருக்குமே என அவர் பக்கம் வருவதை கமிஷனர் லோகநாதன் தவிர்த்து வேறு பகுதியில் நின்றுகொண்டிருந்தார். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல், ஒருபுறம் தி.மு.க., அரசின் பிடிவாதம், மறுபுறம் நீதிமன்றம் உத்தரவை செயல்படுத்த முடியாத இக்கட்டான நிலை என இருதரப்பையும் சமாளிக்க முடியாமல் போலீசார் படும்பாட்டை பார்ப்பதற்கு பரிதாபமாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ