உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழை கட்டாய பாடமாக்குவதில் தி.மு.க., அரசு அலட்சியம்: ராமதாஸ்

தமிழை கட்டாய பாடமாக்குவதில் தி.மு.க., அரசு அலட்சியம்: ராமதாஸ்

சென்னை:'சட்டம் இயற்றி, 20 ஆண்டுகள் நிறைவடைந்தும், 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் இன்னும் கட்டாய பாடமாக்கப்படவில்லை. தமிழை கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவ, மாணவியருக்கான, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கின்றன. வழக்கத்தை போலவே, நடப்பாண்டிலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் கட்டாய பாடமாக்கப்படவில்லை. தமிழக அரசின் அலட்சியம்தான் இதற்கு காரணம்.உலகிலேயே தமிழகத்தில் மட்டும்தான், தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல், பட்டப்படிப்பை கூட நிறைவு செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. இந்நிலையை மாற்ற, தமிழப் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம், 2006ல் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் கட்டாயப் பாடம் நீட்டிக்கப்படடு, 2025 - 26ம் ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், அனைவருக்கும் தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.தமிழ் கட்டாயப் பாட சட்டத்திற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும், தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளின் காரணமாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் கட்டாய பாடமாக்கப்படுவது, தாமதமாகிக் கொண்டே வந்தது.கடந்த இரண்ட ஆண்டுகளாக, அந்த வழக்கை விசாரணைக்கு கொண்டு வர, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தமிழக அரசு கோட்டை விட்டுவிட்டது. ஒரு மாநிலத்தில், அம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியை படிக்காமல், பட்டம் பெற முடியும் என்பது அவலமாகும். தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டியது, அரசின் அடிப்படைக் கடமை. அதை கூட செய்யாமல், தமிழை காப்போம், தமிழுக்கு பெருமை சேர்ப்போம் என முழங்குவதில் பயனும் இல்லை; பொருளும் இல்லை.எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுப்படுத்தி, அடுத்த ஆண்டிலாவது, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ