ரூ.3.50 லட்சம் கோடி கடன் வாங்கியதுதான் தி.மு.க., அரசின் சாதனை: பழனிசாமி
சென்னை:''ஆட்சிக்கு வந்த பின், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியதுதான் தி.மு.க., அரசின் சாதனை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றம்சாட்டியுனார்.அவர் அளித்த பேட்டி:தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியப் போகின்றன. இன்னும் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிக்கு வந்தால், 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு பின் கேட்டால், 'நீட் தேர்வை மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும்' என, முதல்வர் கைவிரிக்கிறார். 'நீட்' தேர்வு விவகாரத்தில் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி, தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது.தி.மு.க., ஆட்சியில் அனைத்து அத்தியாவசிப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஓட்டை, உடைசல் பஸ்கள்தான் ஓடுகின்றன. மழை பெய்தால் பஸ்சுக்குள் குடை பிடிக்கும் நிலைதான் உள்ளது. அனைத்து பஸ்களிலும் பெண்களுக்கு இலவசம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், இப்போது சில பஸ்களில் மட்டுமே இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது.கடன் வாங்கி தான் மகளிர் உரிமை தொகை 1,000 ரூபாய் கொடுக்கின்றனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இவ்வளவு கடன் வாங்கியதுதான் தி.மு.க., அரசின் சாதனை.இவ்வாறு அவர் கூறினார்.