சென்னை:காவிரி ஆணைய கூட்டத்தில், மேகதாது விவகாரத்தை, நீர்வளக் கமிஷன் பார்வைக்கு எடுத்து செல்ல, தி.மு.க., அரசு அனுமதித்ததற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:காவிரி மேலாண்மை ஆணையத்தின், 28 வது கூட்டம் நேற்று முன்தினம் டில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், மேகதாது அணை விவகாரம், விவாதப் பொருளில் குறிப்பிடப்பட்டு இருப்பதால், அது குறித்து பேச வேண்டும் என, கர்நாடக தரப்பு அதிகாரிகள் வலியுறுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.விவாதப் பொருள் பட்டியலில், மேகதாது அணை குறித்து இருப்பதை அறிந்த தி.மு.க., அரசும், கலந்து கொண்ட அதிகாரிகளும், ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை?விதிகளுக்கு புறம்பாக, மேகதாது பிரச்னை குறித்து, கர்நாடக அதிகாரிகள் பிரச்னை எழுப்பியபோது, அதை எதிர்த்து வெளிநடப்பு செய்யாமல், வாக்கெடுப்பில் கலந்து கொண்டது ஏன்?விவாதப் பட்டியலில், மேகதாதுவை சேர்க்காமல் விட்டிருந்தாலோ, ஆட்சேபனை தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தாலோ, நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், மேகதாது பிரச்னை நீர்வளக் கமிஷன் பார்வைக்கு சென்றிருக்காது.தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசும், திரைமறைவு நாடகத்தை நடத்தி, தமிழகத்திற்கு காவிரி நதி நீர் பிரச்னையில், மீண்டும் மீண்டும் துரோகத்தை நிகழ்த்தி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.