உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் போலீஸ் தடையை மீறி தே.மு.தி.க., பேரணி

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் போலீஸ் தடையை மீறி தே.மு.தி.க., பேரணி

சென்னை:விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, தடையை மீறி பேரணி நடந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தே.மு.தி.க., நிறுவனத் தலைவர் விஜயகாந்த், கடந்தாண்டு டிச., 28ல் காலாமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதி சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, சென்னை கோயம்பேடு கட்சி தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் நடந்து வருகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்கான குருபூஜையில், தே.மு.தி.க., தொண்டர்கள் பங்கேற்றனர்.அப்போது, மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடத்திற்கு, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, அவரது மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் தலைமையில் கட்சியினர் பேரணியாக செல்ல, போலீசார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி, தே.மு.தி.க.,வினர் பேரணி நடத்த முயன்றதால், போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், சிறிய சலசலப்புக்கு பின், திட்டமிட்டப்படி தே.மு.தி.க.,வினர் அமைதி பேரணி நடத்தினர்.தொடர்ந்து, அரசு சார்பில் பங்கேற்ற ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பிரேமலதா உள்ளிட்டோர், விஜயகாந்த் படத்திற்கு ஆரத்தி எடுத்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் கூட, தே.மு.தி.க.,வினர் விரும்பியப்படி பேரணி அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. விஜயகாந்த் குடும்பத்தினரும், தே.மு.தி.க., தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பர். விஜயகாந்த் மீதுள்ள மாறாத பற்று காரணமாக, முதல்வர் ஸ்டாலின், அரசு சார்பாக என்னை அனுப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:விஜயகாந்த் அருள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்; தமிழகத்திற்கு நல்லது நடக்கும். மாற்று அரசியலில், அவர் ஜெயித்து காட்டியவர். அவரது குருபூஜை பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். பிரச்னையில்லாத பேரணி நடத்த அனுமதிக்காததை கண்டிக்கிறோம். இந்த பிரச்னையை காவல் துறை சிறப்பாக கையாளவில்லை. இதை அரசியல் காழ்ப்புணர்ச்சியாக தான் பார்க்கிறோம். ஆளும் கட்சியின் அத்துமீறலில், போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.முன்னாள் கவர்னர் தமிழிசை கூறுகையில், ''கடந்த, 2014ல் பிரதமர் மோடியை ஆதரித்து, தமிழக முழுதும் விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அதற்காக இப்போதும் நன்றியுடன் இருக்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஈடுபாடுடன் உள்ள குடும்பம். அவர் இறந்த பின், இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால், விஜயகாந்த் மீது மக்கள் வைத்துள்ள அன்பை காட்டுகிறது,'' என்றார்.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில், ''சினிமா துறையில் முத்திரை பதித்தவர். அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அவருக்கு இதய அஞ்சலி,'' என்றார்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ''சினிமா துறையில் வாய்ப்புகளை தேடி வந்த பலருக்கு வாழ்வு கொடுத்தவர். அவரால் வாழ்ந்தவர் பலர், அவரால் வீழ்ந்தவர் யாருமில்லை,'' என்றார்.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ''எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, சபையை குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடிக்க முழு ஒத்துழைப்பு அளித்தார். எதிர்க்கட்சி தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டார்,'' என்றார்.தே.மு.தி.க., மாநில துணை செயலர் சுதீஷ் கூறுகையில், ''முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணிக்கு, 20 நாட்களுக்கு முன், போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு அப்போதே மறுத்து இருந்தால், நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றிருப்போம். ஆனால், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. தி.மு.க., - அ.தி.மு.க.,வின் பேரணிக்கு அனுமதி அளிக்கப்படும்போது, தே.மு.தி.க.,விற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?,'' என கேள்வி எழுப்பினார். அமைதி பேரணிக்கு அனுமதி கேட்டோம்; மறுக்கப்பட்டது. ஆனாலும், அமைதியாக பேரணியை நடத்தினோம். அனுமதி மறுக்கப்பட்டது மன வருத்ததை அளிக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., தலைவர்களின் நினைவு நாள் பேரணிக்கு அனுமதி வழங்கப்படும்போது, தே.மு.தி.க., பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அமைதி பேரணியை எதற்காக தடுத்தனர் என்பது தெரியவில்லை.-- பிரேமலதா,தே.மு.தி.க., பொதுச்செயலர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ