தி.மு.க., ஆட்சியில் ஆளுக்கொரு நீதி
சென்னை:'மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா அல்லது மக்களின் உயிரை பறிக்கும் துறையா' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:நிர்வாகத் திறனற்ற தி.மு.க., ஆட்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா அல்லது மக்களின் உயிரை பறிக்கும் துறையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு, கடந்த 42 மாத தி.மு.க., ஆட்சியில் நடந்த கொடுமைகள் கணக்கில் அடங்காது. கால்பந்து வீராங்கனை, போலீஸ்காரர் மகள் ஆகியோருக்கு தவறான சிகிச்சை, சளி தொல்லைக்கு நாய்க்கடி ஊசி, விளம்பர மோக மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சியில், பொறியியல் மாணவர் உயிரிழப்பு என, அடுக்கிக் கொண்டே போகலாம். கடந்த வாரம் கிண்டி மருத்துவமனையில் டாக்டரை தாக்கிய சம்பவம், அதை தொடர்ந்து, அரசு டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்த நாள் சிகிச்சைக்கு வந்த விக்னேஷ் என்பவருக்கு, உரிய சிகிச்சை அளிக்காததால், அவர் உயிரிழந்தார். டாக்டர்களின் கோரிக்கையை முன்பே பரிசீலித்திருந்தால், அவரது இறப்பை அரசு தடுத்திருக்க முடியும். சட்ட விரோதமாக செயல்பட்டு, குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த, 'யு டியூபர்' இர்பான் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என, முதலில் வானத்துக்கும் பூமிக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குதித்தார். இர்பான், துணை முதல்வர் உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் வெளியானதும், 'இது கொலைக் குற்றமா' என, பத்திரிகையாளர்களிடம் கேட்கிறார். இது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால், தி.மு.க., ஆட்சியில் ஆளுக்கொரு நீதியா? ஏற்கனவே யு டியூபர் இர்பான், குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் இதுவரை, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க., ஆட்சியில் இப்படித்தான் எல்லாமே புரியாத புதிராக உள்ளது.