தி.மு.க.,விடம் இருந்து ஈரோடு கிழக்கை காங்.,குக்கு திரும்ப பெற வலியுறுத்தல்
'ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க.,விடம் இருந்து, மீண்டும் காங்கிரசுக்கு கேட்டு பெற வேண்டும்' என, மறைந்த இளங்கோவனின் ஆதரவாளர்கள், தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவராக இரண்டு முறையும், செயல் தலைவராக ஒரு முறையும் இருந்த இளங்கோவனுக்கு, அக்கட்சியில் முன்னாள் எம்.பி.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என ஆதரவாளர்கள் உள்ளனர். கடந்த 2021 சட்ட சபை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்., சார்பில், இளங்கோவன் மூத்த மகன் திருமகன் ஈ.வெ.ரா., போட்டியிட்டு வென்றார். அழைப்பு அவர், திடீரென மாரடைப்பால் இறந்த பின், இடைத்தேர்தலில் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால், அதன்பின் நடந்த இடைத்தேர்தலில், அத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்காமல், தி.மு.க., போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்நிலையில், இளங்கோவனின் நெருங்கிய நண்பரும், முன்னாள் தமிழக காங்., பொருளாளருமான நாசே ராமச்சந்திரன், 'தன்மானத் தலைவர் இளங்கோவன் தேசிய பேரவை' என்ற அமைப்பை துவக்கினார். தமிழகம் முழுதும் உள்ள இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு கடிதம் எழுதி, தன் தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள நாசே ராமச்சந்திரன் வீட்டில், இளங்கோவன் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் உட்பட பலர் பங்கேற்றனர். தீர்மானம் கூட்டத்தில், இளங்கோவனுக்கு, ஈரோட்டில், 9 அடி உயர வெண்கல சிலை அமைப்பது; வரும் சட்டசபை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியை, தி.மு.க.,விடம் இருந்து காங்கிரசுக்கு கேட்டு பெறுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன - நமது நிருபர் - .