கரூர்: கரூர் த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த இடத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, டூ - வீலரில் புகுந்து சத்தமிட்ட தி.மு.க., தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் - ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில், 41 பேர் உயிரிழப்பை ஏற்படுத்திய த.வெ.க., பிரசார கூட்டம் நடந்த இடத்தில், சி.பி.ஐ., -- எஸ்.பி., பிரவீன் குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில், 3டி லேசர் அளவீடு கருவி மூலம், எத்தனை பேர் வரை நிற்க மற்றும் உட்கார முடியும் என, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, டி.வி.எஸ்., ஜூபிடர் டூ - வீலரில் ஒருவர் திடீரென உள்ளே புகுந்தார். அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களிடம், 'விஜய் கட்சி கூட்டம் நடந்து ஒரு மாசம் முடிந்து விட்டது. 'இன்னமும் அடிக்கடி விசாரணை என்ற பெயரில், போக்குவரத்தை தடை செய்து, வேலுச்சாமிபுரம் பகுதி மக்களை ஏன், தொந்தர வு செய்கிறீர்கள்?' என, கேள்வி எழுப்பி சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அந்த நபரை டூ - வீலருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்செல்ல போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, டூ - வீலரில் வந்த நபர் கரூர் டவுன் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில், அவர், வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த கண்ணதாசன், 42, என்பதும், தி.மு.க., தொண்டர் எனவும் தெரிய வந்தது. அவர் ஓட்டி வந்த டூ - வீலர் நம்பர் பிளேட்டில், முதல்வர் ஸ்டாலின், கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி புகைப்படங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.