டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க., கபட நாடகம் வெளிப்பட்டுள்ளது: சொல்கிறார் உதயகுமார்
மதுரை: தமிழகத்தின் டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் விவகாரத்தில், மத்திய அரசு அறிவிப்பு மூலம் தி.மு.க., வின் கபட நாடகம் வெளிப்பட்டுள்ளது என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
டங்ஸ்டன் பிரச்சனையில் தமிழக அரசு என்ன செய்கிறது, மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா, முதல்வர் ஸ்டாலின் உண்மையை சொல்கிறாரா, மத்திய அரசு என்ன சொல்கிறது போன்ற குழப்பங்கள்இருந்தன. ஆனால் தற்போது மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.அதாவது, டங்ஸ்டன் திட்டத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரைத்து மத்திய அரசு நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. 2021, செப்.,14 ல் மேலுார், தெற்கு தெரு, முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் அமைக்க புவியியல் குறிப்பாணையை தமிழக அரசிடம் ஒப்படைத்தது. அந்த சமயத்தில் டங்ஸ்டன் உள்ளிட்ட முக்கிய கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசிடம் தான் இருந்தது. ஆனாலும் ஒப்பந்தம் கோரப்படுவதற்கு இடைப்பட்ட 10 மாதங்கள் தி.மு.க., என்ன செய்தது என்பதை சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி விரிவாக பேசி தி.மு.க.,வின் கபட நாடகத்தை தோலுரித்து காட்டினார். ஆனால் அதற்கு முதல்வர் ஸ்டாலின் வளவள கொள கொள பதில் அளித்து சமாளித்தாரே தவிர உரிய விளக்கத்தை கொடுக்கவில்லை.கடந்த 9 ஆண்டுகளாக கனிமங்கள் ஏலம் விடும் அதிகாரம் தமிழக அரசுக்கு இருந்தபோதிலும் ஏலம் விடுவதை பற்றி அ.தி.மு.க., சிந்திக்கவில்லை. டிச., 6ல் தமிழக அரசு தலைமை செயலருக்கு மத்திய சுரங்க அமைச்சக செயலாளர் எழுதிய கடிதத்தில், டங்ஸ்டன் உட்பட மூன்று கனிம மண்டலங்கள் குறித்த விவரங்களை கேட்டிருக்கிறார்.அதில் தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனர், 'நாயக்கர்பட்டி பகுதியில் 10 சதவீதம் பகுதி பல்லுயிர் தளம் மிகுந்த பகுதிகளாக உள்ளது' என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கனிமப் பகுதிகளில் ஏலம் விடுவது தொடர்பாக எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் பிரச்சனையில் மக்களின் உரிமையை பறிக்கும் முயற்சியில் தி.மு.க., முழுமையாக செயல்பட்டுஉள்ளது, மக்களுக்கு எதிராக ஒரு கபட நாடகத்தை ஆடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றார்.