உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கங்கா ஸ்நானம் ஆச்சா?

கங்கா ஸ்நானம் ஆச்சா?

தீமைகள் பொசுங்கி நன்மைகள் ஒளிவீசும் திருநாளே தீபாவளி திருநாள். எப்படி... தீமைகளின் உறைவிடமாகத் திகழ்ந்த நரகாசுரனை, பகவான் கிருஷ்ணர் அழித்த நாள் தானே தீபாவளி. அப்படி எனில், தீபாவளி நன்மைகள் சேரும் ஒளிநாள் தானே! தீபம் + ஆவளி. அதாவது, தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து வணங்கும் திருநாள் என்றும் சொல்வர். அதாவது, நன்மைகள் அளிக்கும் இறைவனை,தீப வடிவில் வழிபடும் நாள் என்பர். இந்த பண்டிகை குறித்த கதைகளை விளக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் நிறைய சிற்பங்கள் உள்ளன.துலா முழுக்கு:தீபாவளியன்று, அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து நீராடுவோம். புத்தாடை அணிந்து, தீபங்களை ஏற்றி, இனிப்புகளை படைத்து இறைவனை வழிபடுவோம். அன்று காலையில் நாம் சந்திப்போரிடம், 'கங்கா ஸ்நானம் ஆச்சா' எனக் கேட்டு மகிழ்கிறோம்.அதாவது, தீபாவளியன்று, புனிதமான கங்கையில் நீராடுவது மகத்துவமானது. இதேபோல்,அதிகாலையில், ஆற்றில்குளிப்பதை, துலா முழுக்கு என, மயிலாடுதுறை, திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பராய்த்துறை தலங்களில் போற்றப்படுகிறது.கங்கை ஆறு பாய்ந்து வளப்படுத்தும் காசித்தலம் புண்ணியம் மிகுந்தது. அங்கிருந்து எடுத்து வரும் நீரால் ராமேஸ்வரம் கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.காசி - ராமேஸ்வரம் ஆகிய இரு தலங்களும் தேசிய ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. காசிக்கு இணையாகவே, தமிழகத்தில் உள்ள தென்காசி, ஸ்ரீவாஞ்சியம், அச்சுதமங்கலம், திருநெடுங்குளம், விருத்தாசலம் உள்ளிட்ட கோவில்கள் போற்றப்படுகின்றன. கங்கை, காவிரி, யமுனை, நர்மதை, கோதாவரி, சரஸ்வதி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய ஆறுகள் மகாமக நாளில், கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் வந்து சேர்வதாக புராணம் கூறுகிறது. இதைக் கூறும் வகையில், இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில், இந்த நதி தெய்வங்களை தனி சன்னிதியில் சிற்பங்களாக அமைத்து வழிபாடு நடைபெறுகிறது. திருவண்ணாமலை, சிதம்பரம்திருக்குளங்கள் 'சிவகங்கை தீர்த்தம்'என அழைக்கப்படுவதால், இக்கோவில் தீர்த்தம் கங்கை நீருக்கு ஒப்பாகக கருதப்படுவதை அறியலாம். காஞ்சிபுரம் அருகில் திருப்பனங்காடு திருத்தலத்தில் உள்ளகுளம் 'சடா கங்கை' எனப்படுகிறது.அக்குளக்கரையில் கங்கா தேவியின் சிற்பமும் உள்ளது. திருக்கடவூர் கோவிலில் அபிஷேகம் செய்யப்படும் நீர், 'காசித் தீர்த்தம்' எனப் பெயர் கொள்கிறது. திருக்கொள்ளம்புதுார் திருத்தலத்தில் இறைவனை கங்கையும் வழிபட்டதாக புராணம் கூறுகிறது.நன்னிலம் அருகே உள்ள ஸ்ரீவாஞ்சியம் கோவில் திருக்குள தீர்த்தம் குப்த கங்கை. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இதில் நீராடுவது உன்னதம். இவ்வூருக்கு அருகே உள்ள அச்சுதமங்கலம் கோவிலில், சோமநாத ஆண்டார் என்ற அடியார் தள்ளாத வயதிலும் கங்கை நீரை காவடியாக சுமந்து வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் திருத்தொண்டினைச் செய்தார்.இத்தலத்தின் கோபுர வாசலில் காவடியைத் துாக்கிய நிலையில் அவரின் வடிவம் சிற்ப வடிவமாகக் காணப்படுகிறது. இவர் முதுமை நிலை அடைந்தபோது, காசி தீர்த்தத்தையே விநாயகப் பெருமான் இங்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, அந்த இறைவன், 'காசி விநாயகர்'என்றே எழைக்கப்படுகிறார்.கோபுரம் வழியே கோவிலுக்குள் நுழையும்போது, வாசலில் இரு பெண்கள் மகர மீன் மீது நின்ற வண்ணம் காட்சி தருவதைப் பார்க்கலாம். மகரத்தின் மீதும் ஆமையின் மீதும் நிற்பவர்கள் கங்கை - யமுனை நதிப் பெண்கள்ஆவர். திருக்கோவிலுக்குள் நுழையும் நம்மை, புனிதப்படுத்தும்நோக்கத்துடன் இச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.கங்கை - யமுனை தெய்வங்களின் சிற்ப வடிவங்களை சிதம்பரம் கோவிலில் கிழக்கு - மேற்கு கோபுரங்களில் காணலாம். அவை அமைந்துள்ள தேவ கோட்டங்களின் மேற்பகுதியில், 'கங்கா தேவி, யமுனை' என்று பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.மகிமைகங்கையை விண்ணில் இருந்து பூமிக்கு கொண்டுவர தவம் இருந்தான் பகீரதன். ஆகாயத்தில் இருந்து கங்கை விழும்போது அதை தாங்க முடியாமல், உலகம் அழிந்துவிடும் என்பதால் சிவபெருமானின் அருளை வேண்டினான். தவமும் இருந்தான். சிவபெருமான் தனது சடைமுடியில் கங்கையைத் தாங்கிக் கொண்டார். இவ்வடிவம், 'கங்காதரமூர்த்தி' எனப்படுகிறது. இதை கங்கைகொண்ட சோழபுரம், பழுவூர், மேலக்கடம்பூர், திருச்சி மலைக்கோட்டை குடைவரைக் கோவில், திருமியச்சூர் போன்ற பல திருக்கோவில்களில் காணலாம்.நடராஜரின் செப்புத் திருமேனியில்அவரது ஜடாமுடியில் இருகரம் கூப்பிய நிலையில் இடுப்புக்கு மேல் பெண் உருவமாகவும், இடுப்புக்குக் கீழ் அலையாக சுழலும் நீர் வடிவமாகவும் கங்கை காட்டப்பட்டுள்ளாள். இவ்வடிவத்தை,'கங்கா பட்டாரகி' எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.நீர் வடிவமாகக் காணப்படும் கங்கையின் அழகிய சிற்ப வடிவம் கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் கோவில் விமானத்தில் உள்ளது. சிவபெருமான்தனது சடையில் கங்கையை தாங்கிக் கொண்டதால், உமாதேவி கோபம் கொள்கிறாள். அந்தக் கோபத்தை இறைவன் தணிக்கும் நிலையிலும் சிற்பங்கள் உள்ளன.ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நடைபெற்றது. அந்த மன்னனின் சிறப்பை கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவில் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அந்த மாமன்னன், கங்கைக் கரை வரை படையெடுத்துச்சென்று வெற்றி பெற்றதன் நினைவாக இவ்வூர் நிர்மாணிக்கப்பட்தை அறிவோம். தனது வெற்றிக்குத் துணையாக நின்ற இறைவனுக்கு, 'கங்கை கொண்ட சோழீஸ்வரர்' எனப் பெயரிட்டு, சிற்பக்கலை அழகுமிக்க கோவிலையும் எழுப்பிமகிழ்ந்தான். இங்கு அவனால் உருவாக்கப்பட்ட ஏரி 'சோழ கங்கம்' என அழைக்கப்பட்டது. இன்று அந்த ஏறி, 'பொன்னேரி' ஆகிவிட்டது. இப்பகுதி மக்களுக்கு இது பெரிதும் பயன்படுகிறது.கும்பகோணம் நாகேஸ்வர சுவாமி கோவிலில் வழிபாட்டில் உள்ள பிள்ளையார், 'கங்கை கொண்டவிநாயகர்' எனப் போற்றி வணங்கப்படுகிறார். பண்டைய நாளில், கோவிலுக்கு தானம் அளித்த செய்தியை கல்வெட்டாக பொறித்தனர். அந்த தானத்தை நிறைவேற்றாவிட்டால், கங்கை கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவர் என, அது எச்சரிக்கிறது.தேசிய ஒற்றுமைக்கும் புனிதத்தன்மைக்கும் சிறப்பிடம் பெறுவதால் தான், தீபாவளி திருநாளில், நம் உறவினர், நண்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையிலும் நன்மைகள் பெறும் வகையிலும்,'கங்கா ஸ்நானம் ஆச்சா?' எனக் கேட்டு, மகிழ்கிறோம்.-----கி.ஸ்ரீதரன்,முன்னாள் துணை கண்காணிப்பாளர்,தமிழக தொல்லியல் துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி