உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிவாரணம் கோரி ஒவ்வொரு முறையும் கோர்ட்டை நாடணுமா? போலீசாருக்கு நீதிபதி கேள்வி

நிவாரணம் கோரி ஒவ்வொரு முறையும் கோர்ட்டை நாடணுமா? போலீசாருக்கு நீதிபதி கேள்வி

சென்னை:அவமதிப்பு வழக்கில், 11 போலீஸ் அதிகாரிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். நிவாரணம் பெற, பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இருப்பதாக, நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான டிக்கெட், விசா கட்டணத்தை பெற்று, மோசடி செய்ததாக, 'டிராவல் ஏஜன்ட்' ஜெயசிங் வசந்த் ரஞ்சித் என்பவருக்கு எதிராக, 2020ல் சென்னை மாநகர போலீஸ் ஆணையர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையரிடம், வேலுார் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த மனோகர் தாஸ் புகார் அளித்தார்.

அவமதிப்பு வழக்கு

கோயம்பேடு இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது; அதன்பின், எந்த நடவடிக்கையும் இல்லை.புகாரின் மீது விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதாக, அரசு வழக்கறிஞர் அளித்த உத்தரவாதத்தை பதிவு செய்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் ஆகியும், இந்த உத்தரவை அமல்படுத்தாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன், விசாரணைக்கு வந்தது. 2022 பிப்ரவரி முதல் கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய துணை ஆணையர், உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் என, 13 போலீஸ் அதிகாரிகள் ஆஜராக, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி, உயர் நீதிமன்றத்தில் நேற்று, 11 போலீஸ் அதிகாரிகள் ஆஜராகினர்.போலீஸ் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ''மருத்துவ விடுப்பில் இரண்டு அதிகாரிகள் உள்ளனர்; மற்ற அதிகாரிகள் ஆஜராகி உள்ளனர்.சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

தவறை உணர வேண்டும்

நீதிமன்ற உத்தரவுகளை குறிப்பிட்ட அவகாசத்துக்குள் அமல்படுத்தும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த உள்ளதாகவும், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து, நிவாரணம் பெற, பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளதாக, நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.அதிகாரிகள் தங்கள் தவறை உணர வேண்டும் என்றும், அவர்களை தண்டிக்கும் நோக்கம் இல்லை என்றும் நீதிபதி கூறினார். வழிகாட்டு நெறிமுறையின் வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருந்ததற்கான காரணங்களை குறிப்பிட்டு, மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.விசாரணையை, வரும் 19க்கு தள்ளிவைத்து, அன்று கோயம்பேடு உதவி ஆணையர் மற்றும் இன்ஸ்பெக்டர் மட்டும் ஆஜராகும்படியும், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
நவ 06, 2024 08:41

இந்த நாட்டில் அதிகார வர்கம் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை இல்லை என முடிவு செய்து விட்டதால் அவர்களின் குற்றங்கள் வளர்ந்து கொண்டுள்ளன என்பதை உணர்ந்து தண்டிப்பது எக்காலமோ அதுதான் இந்நாட்டின் பொற்காலமாக இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை